1950 தொடங்கி 60 வரையிலான 10 ஆண்டுகளை, நாம் ‘போராட்டப் பத்தாண்டுகள்’ என்று அழைக்கலாம். பல்வேறு விதமான, பல்வேறு காரணங்களுக்கான போராட்டங்கள் அப் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. திராவிடர் கழகமும், திராவிடர் கழகத்திலிருந்து 1949ஆம் ஆண்டு பிரிந்து சென்ற திராவிட முன்னேற்றக் கழகமும், அந்தப் போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தின.

அவற்றுள் ஒன்றுதான், நாம் ஏற்கனவே பார்த்த குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம். இன்னொரு மிகப்பெரிய போராட்டம், 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டம். அதனை விரிவாக அடுத்த பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம். இவை இரண்டும் அல்லாத இன்னும் பல போராட்டங்கள் இக்கால கட்டத்தில் நடைபெற்றன. அவற்றைத் தொகுத்தும், சுருக்கியும் இவ்வியலில் நாம் காண இருக்கிறோம்.

வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், கல்லக்குடிப் போராட்டம், நேருவைக் கண்டித்து ரயில்நிறுத்தப் போராட்டம், இராமர்பட எரிப்புப் போராட்டம், பிராமணாள் கஃபே எதிர்ப்புப் போராட்டம் – என இத்தனை போராட்டங்கள் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் நடைபெற்றுள்ளன. அந்த ஆண்டுகளில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர் என நான்கு முதலமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆட்சி புரிந்துள்ளனர். ஒவ்வொருவரும், இந்தப் போராட்டங்களை ஒவ்வொரு விதமாகக் கையாண்டுள்ளனர். இடையிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்துள்ளன.

இப்போராட்டங்கள் அனைத்தும், ஒரே தன்மையுடையனவா என்று கேட்டால், ஆம் என்று சொல்லிவிடலாம். இவை அனைத்துமே, வடவர் எதிர்ப்புப் போராட்டங்கள் என்பதை நுணுகிப் பார்த்து நாம் அறிந்து கொள்ள முடியும். பிள்ளையார் சிலை உடைப்பு, இராமர்பட எரிப்பு போன்றவைகளெல்லாம் கடவுள் மறுப்பு அல்லது இந்துமத எதிர்ப்புப் போராட்டங்கள்தானே, அவற்றுக்கும் வடவர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் தோன்றும். கடவுள் வழிபாடோ, இந்துமதமோ, வடநாட்டில் மட்டுமா இருக்கின்றது. இந்தியா முழுவதும்தானே இருக்கிறது. என்றும் கேட்கலாம். மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த அய்யங்கள் சரியானவை என்று தோன்றும். ஆனால், அன்றைய தமிழகச் சூழலையும், பெரியாரின் உரைகளையும், நாம் உற்று நோக்கினால், இவையும் வடவர் எதிர்ப்புப் போராட்டங்களே என்பது தெளிவாகும்.

பெரியார், ‘கடவுள் இல்லை, மதம் இல்லை’ என்று பொதுவாகத்தான் கூறினார். அந்தக் கூற்று எல்லா மதங்களுக்கும், எல்லா மதங்களில் உள்ள கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானது என்பது புரிகிறது. எனினும் இந்து மதத்திற்கு எதிராகவும், வடநாட்டிலிருந்து இங்கு வந்த குறிப்பிட்ட சில கடவுள்களுக்கு எதிராகவும் பெரியாரின் குரல் ஓங்கி ஒலித்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வருணாசிரம, சாதி அமைப்பை அடித்தளமாகக் கொண்டு இயங்குகிற மதம் என்பதாலும், அந்த வருணசாதி ஏற்றத் தாழ்வுகள் வடக்கிலிருந்து வந்தவை என்பதாலும், மற்றவைகளைக் காட்டிலும், இந்து மதத்தின் மீதும், வடவர் மீதும் அவருக்குச் சினம் மிகுதியாக இருந்தது.

எல்லாவிதமான கடவுள் உருவங்களையும், வழிபாட்டு முறைகளையும் பெரியார் எதிர்த்தார் என்றபோதிலும், அவர் பிள்ளையார் சிலைகளை உடைத்தது போல, வேறு கடவுள் சிலைகளை உடைக்கவில்லை. அவ்வாறே இராமர் படத்தை எரித்ததைப் போல, வேறு கடவுள் படங்களை எரிக்கவில்லை. கடவுள் இல்லை என்று அழுத்தமாகவும், பொதுவாகவும் அவர் தன் வாழ்நாள் முழுவதும் சொன்ன போதிலும், எந்த இடத்திலும் கருப்பன், மாடன், அய்யனார் போன்ற நாட்டுப்புறத் தெய்வங்களைப் பொது இடங்களில் உடைத்ததோ, எரித்ததோ இல்லை. அதனால், நாட்டுப்புற மக்களின் வழிபாட்டை, அவர் ஏற்றுக் கொண்டார் என்று பொருள் ஆகாது. எனினும், வடநாட்டிலிருந்து இறக்குமதியான கடவுள்களைத்தான் அவர் கூடுதல் ஆவேசத்தோடு எதிர்த்தார். எனவே இந்தக் கடவுள் மறுப்புப் போராட்டங்களும், ஒருவிதத்தில் வடவர் எதிர்ப்புப் போராட்டங்களாகவே ஆகின்றன.

இப்போராட்டங்களுள் மார்வாரி சுரண்டல் எதிர்ப்புப் போராட்டமே முதலில் நடைபெற்றது. 1950ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய, வடவர் உணவகம், வடவர் துணியகம் முன்னால் நடைபெற்ற இம்மறியல் போராட்டம் தொடர்ந்து 151 நாள்கள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் ஓர் அடையாளமாக, சென்னை சவுகார்பேட்டை பகுதியிலிருந்த ஆரியபவன் உணவகம் முன்பும், கிஷன்லால் செல்லாராம், துணிக்கடை முன்பும் மறியல் நடைபெற்றது. மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே, ஒவ்வொரு நாளும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள கட்சி உறுப்பினர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள், எந்த வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. யாரையும் தொட்டு நிறுத்தித் தடுப்பதில்லை. அந்த உணவகத்திற்கோ, அந்தத் துணிக்கடைக்கோ வருகிறவர்களிடம் கைகூப்பி நின்று, “வேண்டாம், வடவர் கடைகளைப் புறக்கணியுங்கள், தமிழர் கடைகளைப் பயன்படுத்துங்கள்” என்று கேட்டுக் கொள்வார்கள். அதனை மீறி உள்ளே செல்பவர்களைக் குறுக்கே படுத்தெல்லாம் தடுப்பதில்லை.

“வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும் சமுதாயத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், ஏராளமான பேதமுண்டு. வியாபாரத்தில் வடநாட்டார் கொள்ளை இனியும் அதிகப்படுமே ஒழிய, சிறுதும் குறையாது. ஆத்மார்த்தத் துறை எனும் மதக் கொடுமை வடநாட்டார் இஷ்டப்படிதான் பெருகுமே தவிர, சமுதாய-சமத்துவம் ஏற்பட வழியில்லை” என்று பெரியார் விடுதலையில் எழுதினார். ஒவ்வொரு ஆண்டும் 50 கோடி முதல் 100 கோடி வரையில் தமிழ்நாட்டின் செல்வம், வடநாட்டிற்கு அடித்துச் செல்லப்படுகிறது. அதனால், தமிழர்களே மார்வாரிகளின், சேட்டுகளின் சுரண்டலிலிருந்து தப்ப வேண்டுமானால், தமிழர்கள் உற்பத்தி செய்யும், பொருள்களையே பயன்படுத்துங்கள் என்று பெரியார் மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தார்.

இப்போராட்டம் தொடங்கி, ஓரிரு மாதங்கள் வரையில், வடநாட்டு வணிகர்கள் இதனைப் பெரிதாகக் கருதவில்லை. பத்துக்கும் குறைவான நபர்கள், வாசலில் நின்று, மறியல் செய்வதால் பெரிய நட்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்றுதான் நினைத்தனர். ஆனால், போகப்போக அதன் விளைவுகள் அவர்களுக்குப் புரிந்தன. தீபாவளி நெருங்கும்போது, விற்பனை குறைவதை அவர்களின் வரவுசெலவுக் கணக்குகள் காட்டின. அதனால் கோபம் கொண்ட ஒரு முதலாளி, ஒருநாள் மறியல் செய்தவர்களை, தாக்க முற்பட்டும், காவல்துறைக்குப் புகார் செய்தும் தன் கோபத்தை வெளிபடுத்தினார். அங்கு தான், அந்தப் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது.

காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர். உடனே, அடுத்து ஏழெட்டு பேர் அங்கு வந்து நின்று மறியல் செய்தனர். கைது செய்யக் கைது செய்ய அலை அலையாக ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். பொதுமக்களுக்கும், அந்தக் கடைகளுக்குப் போக வேண்டாம் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அங்கே போனால், மறியல், கைது என்று ஒரே பிரச்சனை, நாம் வேறு கடைகளுக்குப் போய்விடலாம் என்று முடிவெடுத்தனர்.

மிகப்பெரிய செல்வமும், செல்வாக்கும் கொண்டவர்களாக விளங்கிய குஜராத் சேட்டுகளும், இராஜஸ்தான் மார்வாரிகளும், இந்தப் போராட்டத்தின் விளைவாக, கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரினர். ஆனால், அக்கட்சியின் ஆதரவும், பெரும் அளவிற்குக் கிடைக்கவில்லை. வடநாட்டினரை, முழுமூச்சுடன் ஆதரித்தால், தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கு, குறைந்துவிடும் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

ஆனால், 1946 முதல் தமிழரசு கழகம் என ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வந்த ம.பொ.சி. மட்டுமே அவர்களுக்கு ஆதரவாகக் கூட்டங்களை நடத்தினார். சென்னை இராயபுரத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், “இனியும் மார்வாரி கடைகளுக்கு எதிரில் திராவிடர் கழகம், மறியல் போராட்டத்தை நடத்தினால், நாங்கள் திராவிடர் கடைகளுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்துவோம்” என்று அறிவித்தார். அப்படி எந்தவொரு மறியலையும் அவர் நடத்தவில்லை என்றாலும், 1950 நவம்பர் தொடங்கி, 51 நவம்பர் வரையில், ஓராண்டு காலம், ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை’த் தமிழ்நாடெங்கும் நடத்திக் கொண்டிருந்தார். அதற்கும், மக்களிடையே பெரிய ஆதரவு கிட்டவில்லை.

1953ஆம் ஆண்டு, ராஜாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், இங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. அவற்றுள் முதன்மையானது நாம் ஏற்கனவே பார்த்த, குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டம். அதனைத் தாண்டி, தி.மு. கழகம் நடத்திய மும்முனைப் போராட்டமும், திராவிடர் கழகம் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டமும் பேரளவிற்கான தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தின.

இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் பற்றி, பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘நான்சென்ஸ்’ என்று ஒற்றைச் சொல்லில் விடை சொன்னார். அதை எதிர்த்து, ஒரு முனையிலும், ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து இன்னொரு முனையிலும், திருச்சி மாவட்டத்திலிருந்த ‘டால்மியாபுரம்’ என்னும் ஊரின் பெயரை, அதன் பழம்பெயரான ‘கல்லக்குடி’ என்றே மாற்ற வேண்டும் எனக் கோரி மூன்றாவது முனையிலும் தி.மு. கழகம், 1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்முனைப் போராட்டத்தை அறிவித்தது.

நேருவிற்கு எதிரான ரயில்மறியல் போராட்டம் ஒருநாள் மட்டுமே நடைபெற்றது. ஆனால், மற்ற இரு போராட்டங்களும், மாதக்கணக்கில் நடைபெற்றன. இவற்றுள், கல்லக்குடிப் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க வடவர் எதிர்ப்புப் போராட்டமாகும். அப்போது, இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது, டாடா, பிர்லா, டால்மியா எனச் சொல்வார்கள். அந்த டால்மியாவின் பெயரில் ஒரு சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் கல்லக்குடியில் இருந்தது. அதனால், கல்லக்குடி என்னும் பெயரையே டால்மியாபுரம் என மாற்றிவிட்டார்கள். அதனை எதிர்த்துத்தான், தி.மு.கழகம் போராட்டம் நடத்தியது.

1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி, கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையில் அப்போராட்டம் தொடங்கியது. காலை 9.30 மணிக்கெல்லாம் அவர் தலைமையில், ஊர்வலமாக வந்த தி.மு.கழகத்தினர், தாங்கள் கொண்டு வந்திருந்த கல்லக்குடி என்று எழுதப்பட்ட ஒரு பெரிய தாளை டால்மியாபுரம் என்ற எழுத்துகளுக்கு மேல் ஒட்டினர். டால்மியாபுரம் தொடர்வண்டி நிலையம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் கைது செய்யாமல், பார்த்துக் கொண்டிருந்தனர். அதனை ஒட்டிவிட்டு திரும்பிவிடுவார்கள் என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களோ அங்கிருந்த தண்டவாளத்தில் படுத்தனர். உடனே காவல்துறை அதிகாரிகள், அருகில் வந்து, “நீங்கள் இப்படிச் செய்தால், பிறகு நாங்கள் ரயில்களை இயக்க வேண்டிவரும்” என்று சொல்லி மிரட்டினார்கள். “எதற்கும் நாங்கள் தயாராகத்தான் வந்திருக்கிறோம்” என்றார் கலைஞர். பிறகு வேறுவழியின்றி, அவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அடுத்ததாக, காலை 11.30 மணிக்கு, காரைக்குடி ராம.சுப்பையா தலைமையில் இன்னொரு அணியினர் வந்தனர். அவர்களும், கல்லக்குடி என்னும் பெயர் எழுதிய தாளை வேறுவேறு இடங்களில் ஒட்டிவிட்டு, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தனர். அவர்களையும் காவல்துறை கைது செய்தது.

இத்துடன் முடிந்துவிடும் என்று காவல்துறையினர் எண்ணிய போது, பகல் 12 மணிக்கு மேல் கவிஞர் கண்ணதாசன் தலைமையில், மூன்றாவது அணியினர் வந்தனர். பொறுமையிழந்த காவல்துறை அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். உடனே கலைந்து செல்லவேண்டும் என்று அச்சுறுத்தினர். அவர்கள் மறுத்ததால், தடியடியும், அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடும் நடந்தன. பெரிய கலவரமாக ஆகிவிட்டது. அன்று மட்டும், காவல்துறையினர் 11 முறை, துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அங்கு நின்று கொண்டிருந்த தொடர்வண்டியில் பயணம் செய்த கேசவன், லால்குடி நடராஜன், அவருடைய 14 வயது மகன் தளபதி ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தனர். டால்மியாபுரம் தொடர்வண்டி நிலையம் ஒரு போர்க்களமானது.

தடியடி, துப்பாக்கிச் சூடு இவைகளை கண்டு அஞ்சாமல், அடுத்தடுத்த நாள்களில் அதேமாதிரி, அணிஅணியாகத் திமுகவினர் போராட்டம் நடத்திக் கொண்டே இருந்தனர். 4 மாதங்களுக்கும் மேலாக, அப்போராட்டம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட கலைஞரும், மற்றவர்களும், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிலருக்கு 3 மாதம், சிலருக்கு 6 மாதம் எனப் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தொடர்வண்டி நிலையத்தின் பெயர் கல்லக்குடி என்று மாற்றப்பட்டது. கலைஞருக்கு, ‘ கல்லக்குடி கொண்டான்’ என்னும் பட்டமும், கட்சியினரால் வழங்கப்பட்டது.

அதே 1953ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் நடத்திய மிகப்பெரிய போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம். ஆனால், அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்யாமலும், வழக்குப் போடாமலும், முதலமைச்சராக இருந்த ராஜாஜி, அதனை ஒரு மாதிரியாகச் சமாளித்தார்.

28.04.1953 அன்று வல்லம் படுகை அருகே உள்ள வடக்கு மாங்குடி என்னும் ஊரில், திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போதுதான், பிள்ளையார் சிலை உடைப்புப் பற்றிப் பெரியார் முதலில் பேசினார்.

‘பிள்ளையார் பற்றி எந்தவொரு குறிப்பும், நம் பழைய இலக்கியங்களில் இல்லை. ஆரியர்களின் வேதங்களிலும் இல்லை. வடநாட்டுப் புராணங்களில் மட்டுமே பிள்ளையார் பற்றிய கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளும், ஆபாசக் கதைகளாகவே இருக்கின்றன. இந்த பிள்ளையார் என்பதே வடஆரியக் கலாச்சாரத்தின் ஓர் அடையாளம். எனவே, இதனை உடைப்பதன் மூலமாக மக்களிடம், ஒரு விழிப்புணர்வையும், வடவர் கலாச்சார எதிர்ப்பையும், உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார்.

”ஒருவன் சதா காலமும் உழைத்துப்போட்டு ஒன்றுமில்லாமல் வாடவும், தற்குறியாய் இருக்கவும், இன்னொருவன் பாடுபடாமல், உழைக்காமல், மேல்சாதிக் காரனாக இருக்கவுமான அமைப்புக்குக் காரணமாக இருக்கின்ற கடவுள் என்பவைகளை ஒழிக்க வேண்டும், உடைத்துத் தள்ள வேண்டும், உடைப்பதற்கு முதல் கடவுளாக, எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாகப், ‘பிள்ளையார் சுழி’ போட்டு ஆரம்பிப்பார்களே, அந்த பிள்ளையாரையே நானும் தேர்ந்தெடுக்கிறேன்” என்றும் விளக்கமாக அன்றையக் கூட்டத்தில் பெரியார் பேசினார்.

பிறகு, பிள்ளையார் சிலை உடைப்பு நாளையும் குறித்து, அறிக்கை வெளியிட்டார். புத்தர் பிறந்தநாளில் (27.05.1953) மாலை 6 மணிக்கு எல்லோரும் பொதுக்கூட்டம் நடத்தி, புத்தர் பிறந்தநாளைக் கொண்டாடி, மண்ணால் ஆன பிள்ளையார் உருவத்தை உடைத்து மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள் என்று அவர் அறிக்கை கூறியது. ”புத்தர் பிரான் வருணாசிரம தர்மத்தையோ, இந்த வருணாசிரம தேவர்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்லர். அவற்றை ஒழிப்பதே புத்த மதத்தின் உட்கருத்து, முதல்கருத்து” என்று சொன்ன பெரியார், அதனால்தான், அந்த நாளை தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

அந்தப் போராட்டத்திற்கான சில நிபந்தனைகளைக் கூறிய பெரியார், அவற்றைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். கோயிலில் உள்ள சிலைகள் எதையும் எடுத்து வந்து உடைக்கக் கூடாது என்பதும், எந்த இடத்திலும், யாரும், எந்த விதமான கலவரத்திலும் ஈடுபடக் கூடாது என்பதும், பெரியார் விதித்த நிபந்தனைகள். பொது இடத்தில் பிள்ளையார் சிலைகளை உடைப்பதற்குக் காவல்துறை தடை விதித்தால், அவரவர் வீட்டில், மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை எல்லோரும் உடைத்திடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

அன்று முதலமைச்சராக இருந்த ராஜாஜியோ, இந்தப் போராட்டத்தை தடை செய்யவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. யார் மீதும் வழக்குப் போடவில்லை. ”அந்த நாளில் அவர்கள் பிள்ளையார் சிலைகளை உடைத்துவிட்டுப் போகட்டும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும் அதே நாள், அதே நேரத்தில், பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்யுங்கள்” என்று மட்டும் அறிக்கை விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிட்டார்.

ராஜாஜியின் நாட்குறிப்புகளை எல்லாம் படித்து அவர் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதியுள்ள அவருடைய பேரன் ராஜ்மோகன் காந்தி, அந்தக் காலகட்டத்திலும் ராஜாஜி எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள், ராஜாஜியின் நாட்குறிப்பில், டி.கே.சண்முகம் நடித்து, ஜெமினி வாசன் தயாரித்த ஔவையார் படம் பார்த்ததாகவும், அது பற்றிய விமர்சனங்களை பதிவு செய்திருப்பதாகவும் எழுதுகிறார்.

கண்டுகொள்ளாமல் இருந்தால் எந்தப் போராட்டமும் தானாகவே காணாமல் போய்விடும் என்று ராஜாஜி நினைத்திருக்கலாம். ஆனால், இன்று வரையில் அந்தப் போராட்டம் பற்றி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். ஒரு பெரிய தாக்கத்தைக், கருத்தியல் தளத்தில் அப்போராட்டம் ஏற்படுத்தி உள்ளது என்பதையே இது காட்டுகின்றது.

அந்தப் போராட்டத்திற்கு, எதிர்வினைகளே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அரசாங்கம் அமைதியாக இருந்தாலும், தனியார் பெயரில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், அந்த வழக்குகள் கீழமை நீதிமன்றத்திலும், அமர்வு நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அதே போல, சில வன்முறை நிகழ்வுகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, முறியடிக்கப்பட்டன. திருச்சியில் ஐயா தங்கியிருந்த கட்டிடத்தைத் தீ வைத்து கொளுத்தத் தீபந்தங்களோடு சிலர் வந்தனர். அவர்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பக்தர்கள் பலர், அந்நேரத்தில் தங்கள் வீடுகளில் ‘விநாயகர் அகவல்’ நூலைப் படித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதற்குப் பிறகு, மூன்றாண்டுகள் கழித்து இராமன்பட எரிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியது. சாதியை காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்ததாகச் சொல்லப்பட்டு, சாதியின் பெயரால் சம்பூகனைக் கொலை செய்த இராமர் படத்தை எரிக்காமல் என்ன செய்வது என்று கேட்டார் பெரியார். அப்போதும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பெரியாருக்கு, மிக நெருக்கமானவர்கள் இருவரே. அந்தப் போராட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதனைத் தந்தை பெரியாரே தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

”இந்தக் கனவான்கள் எனது மரியாதைக்குரியவர்கள் ஆவார்கள். இவர்களில் எம்.எல்.ஏ. ஒருவர். இவர் மக்கள் பிரதிநிதி உரிமை கொண்டவர். மற்றொருவர் ஒரு மடாதிபதி ஆவார்கள். இவர்கள் இருவரும் யாரென்றால், வரதராஜுலு நாயுடு அவர்களும், குன்றக்குடி மடாதிபதிகளும் ஆவார்கள்” என்று பெரியார் அவர்களைப் பற்றிக் குறித்துள்ளார். பெரியார் குறிப்பிடும் இருவரும் அவருக்கு, மிக நெருக்கமானவர்கள் என்பதோடு, அன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசரும், பெரியாருக்கு மிகவும் வேண்டியவர். ஆனாலும், அப்போராட்டத்திலிருந்து பின்வாங்குவதற்குப் பெரியார் தயாராக இல்லை.

”இராமன் சம்மந்தப்பட்ட நூல்களை ஒரு தடவைக்கு நூறு தடவை படித்து, ஆராய்ந்து பார்த்ததோடு, சுமார் 30-40 ஆண்டு ஆராய்ச்சியில் கழித்துவிட்டு, ஆயிரக்கணக்கான கூட்டங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் பேசி, மெய்ப்பித்துவிட்டு… பிறகுதான், கொளுத்தச் சொல்கிறேன்” என்று கூறும் பெரியார், என் கேள்விகளுக்கோ, குற்றச்சாட்டுகளுக்கோ எந்த விடையும் சொல்லாமல், போராட்டம் வேண்டாம் என்று மட்டும் சொன்னால், அது என்ன நியாயம் என்று கேட்கிறார்.

 

பெரியாரின் ஆணைப்படி, அன்று (01.08.1956) ஆயிரக்கணக்கானவர்கள் இராமர் படத்தைப் பொது இடங்களில் கொளுத்தினார்கள். காமராசரும், ராஜாஜியைப் போலவே நடந்து கொண்டார். கைது செய்த எல்லோரையும், அன்று மாலையே விடுதலை செய்துவிட்டார். அதற்கு மட்டும்தான் பெரியார் வருந்தினார். ”ஒருமாதம் இரண்டு மாதமாவது சிறையில் இருக்க வேண்டிவரும் என்று சொல்லிவிட்டு, புத்தகங்கள், படுக்கையோடு வந்த என்னை, குருசாமியை, கழகத் தோழர்களை அன்று மாலையே விடுதலை செய்துவிட்ட காரியம்தான் எங்களுக்குக் கொஞ்சம் அவமானமாகப் போய்விட்டது” என்று பெரியார் வருத்தப்பட்டுக் கொண்டார்.

இறுதிப்பகுதியாக, பெரியார் நடத்திய ‘பிராமணர் பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தைப் பார்த்துவிடலாம். சாதியே கூடாது என்று பெரியார் சொன்னாலும், பல்வேறு சாதிப் பெயர்களில், அமைந்துள்ள நிறுவனங்கள், கடைகளின் பெயர்களையோ, அய்யர், அய்யங்கார் என்னும் பெயர்களில் அமைந்துள்ள கடைகளையோ கூட அவர் எதிர்க்கவில்லை. ‘பிராமணர், பிராமணாள்’ என்று இருந்த பெயர்ப் பலகைகளைக் கடும் கோபம் கொண்டு எதிர்த்தார். அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். ‘சாதி வேறு, வருணம் வேறு இல்லையா? நீ பிரமணன் என்றால், நான் யார்? சூத்திரன் தானே? அந்த இழிவை, நான் ஏன் ஏற்க வேண்டும்?’ என்று கேட்டார்.

ஆதலால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரமணாள் என்னும் பெயர்ப் பலகைகள் எங்கு இருந்தாலும் அவற்றை அவரவர்களே அழித்துவிட வேண்டும் அல்லது அரசாங்கம் உடனடியாகத் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். இரண்டும் நடைபெறவில்லை என்றால், 05.05.1957 முதல் அதற்கான போராட்டத்தைத் திராவிடர் கழகம் தொடங்கும் என்று அறிவித்தார். பல உணவகங்கள், பல நிறுவனங்கள் பிராமணர் என்னும் பெயரை அழித்துவிட்டன. ஒரு சிலர் அழிக்க முடியாது என்று அறிவித்தனர். அவர்களை எதிர்க்கும் வகையில், அடையாளமாக, சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த, முரளி பிரமணாள் கஃபே முன்பு போராட்டம் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில தொண்டர்கள் அந்த உணவகத்தின் வாயிலில் நின்று மறியல் செய்தனர். அதன்பிறகு, அரசாங்கம் கைது நடவடிக்கையில் இறங்கியது. ஒருநாள் அந்த உணவகத்தில் வேலை செய்கின்றவர்கள், போராட்டக்காரர்கள் மீது, மாடியிலிருந்து கொதிக்கும் வெந்நீரைக் கொட்டினார்கள். அன்றுதான் கலவரம் ஆயிற்று. ஆனால், மறுநாளும் தொடர்ந்து, தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். 8 மாதங்களுக்கு மேல் நடத்த அப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு, சிறைக்குச் சென்றனர்.

இறுதியாக, அந்த உணவகத்தின் உரிமையாளர் வெங்கடேசன், இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்னும் நிலைக்கு வந்துவிட்டார். தன் உணவகத்தின் பெயரைத் தானே ‘முரளி ஐடியல் ஓட்டல்’ என்று 22.03.1958 அன்று மாற்றிவிட்டார். மாற்றியதோடு மட்டுமின்றி, அதற்கு முதல்நாள் நள்ளிரவு தந்தை பெரியார் அவர்களை நேரில் சென்று பார்த்து, தன் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறாக, இப்போராட்டம், தன் இலக்கை அடைந்தது.

இதே ஆண்டுகளில், தேசியக் கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக, இந்திய தேசிய வரைபட எரிப்பு ஆகிய போராட்டங்களும் நடைபெற்றன. அனைத்துப் போராட்டங்களும் வடவர் எதிர்ப்பு என்னும் ஒரு புள்ளியில் நிலை கொண்டிருந்தன.

(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. ஆனைமுத்து, வே (பதிப்.)- ”பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் – தொகுதி 6, பகுதி 1” பெரியார் ஈ.வெ.ராமசாமி – நாகம்மை கல்வி மற்றும் ஆய்வு அறக்கட்டளை, சென்னை-5

2. வீரமணி, கி – ”திராவிடர் கழக வரலாறு – தொகுதி 1” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7

3. கருணாநிதி, மு – ”நெஞ்சுக்கு நீதி – தொகுதி 1” – திருமகள் பதிப்பகம், சென்னை-17

4. திருநாவுக்கரசு, க – ”தி.மு.க. வரலாறு – பாகம் 1” – நக்கீரன் பதிப்பகம், சென்னை-28

5. விடுதலை ராசேந்திரன் – ”பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7.

6. Rajmohan Gandhi – “RAJAJI A LIFE” – Penguin books, New Delhi.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.