“தொடங்கியது” என்னும் சொல் பொருத்தமானதோ, போதுமானதோ இல்லை. “வெடித்தது” என்று தான் சொல்ல வேண்டும்!
“எத்தனை காலம்தான் அடிமையாய் இருப்போம். எங்களுக்கும்
உரிமைகள் உண்டு, உணர்ச்சிகள் உண்டு. எதிர்கால வாழ்க்கை உண்டு”  என்னும்  முழக்கத்துடன் எழுந்தனர் ஆப்பிரிக்க-அமெரிக்க மக்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில். அமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள கான்சாஸ் (kansas) மாநிலத்தில்,  பிராங்லின் கோல்மன் என்னும் நிறவெறியன்  சார்லஸ் டவ் என்னும் கருப்பு மனிதரை “நீ யார் என்னை எதிர்த்துப் பேசுவதற்கு?”  என்னும் ஆணவ வெறியுடன் கூச்சலிட்டுச் சுட்டுக் கொன்றார். 1855 நவம்பர் 21 அன்று நடந்த அக்கொலை அமெரிக்கா முழுவதும் ஒரு போராட்ட அலையை உருவாக்கி விட்டது.  சிறுநெருப்பு,  பெருந்தீயாய் மாறி, இன்று நாம் வரலாற்றில் படிக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போராக 1861 ஏப்ரல் முதல்  பற்றி எரிந்தது.

அந்தப் போர் தொடங்குவதற்குச் சரியாக ஒரு மாதம் முன்பு,  அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற ஆப்ரஹாம் லிங்கன், தான் அதிபராக இருந்த நான்கு ஆண்டுகளும் அதனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நிறவெறிக்கு எதிராக இருந்த லிங்கனின் ஆட்சியை எதிர்த்து, அன்று அமெரிக்கக் குடியரசில் இணைந்திருந்த 34 மாநிலங்களில்  ஏழு மாநிலங்கள்  அமெரிக்க ஒன்றியத்தை விட்டே பிரிந்து சென்றன. ஆனாலும் அடிமை முறையை ஒழிப்பதில் அவர் உறுதியாய் இருந்தார். இறுதியில் 1865 ஆம் ஆண்டு லிங்கனின் உயிரையும் அந்த நிறவெறி பறித்துச் சென்றுவிட்டது.
போராட்டங்கள் ஓயவில்லை. இடைவிட்டு, இடைவிட்டு வேறு வேறு தலைமைகளின் கீழ், வேறு வேறு வடிவங்களில் நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்கள் அங்கு தொடர்ந்தன. இன்றும்  ஜார்ஜ் பிளாயிட்  உருவத்தில் வந்து அது நிற்கிறது.
எனினும், நேற்றுகளை  விட இன்று ஒரு முன்னேற்றம் தெரிகிறது. கருப்பின் நியாயத்தை, உணர்ந்தோ, வேறு வழியின்றியோ, வெள்ளைத் தோல்களே அந்தப் போராட்டங்களை  ஏற்றுப் பணிகின்றன. ஜார்ஜின் கழுத்தை நெரித்துக் கொன்ற அந்த 8 நிமிடங்கள் 46 நொடிகள் என்பது ஓர் ஊழிக் காலமாய் உணரப்படுகிறது. அமெரிக்கக் காவல்துறையினர் பலர் 8:46 நிமிடங்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கின்றனர்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், தான் தயாரிக்கும் முகப்பூச்சுப் பசையின் பெயரில்
Fair and lovely யில்  உள்ள fair என்பதை எடுத்துவிடப் போவதாக அறிவித்துள்ளது. கருப்பை வெள்ளையாய் மாற்றுவதே அழகு (fair) என்னும் கருத்து உலகின் மனசாட்சியை உறுத்த ஆரம்பித்துள்ளது.
இந்த மாற்றங்களுக்கெல்லாம் போராட்டங்களே அடித்தளம்.
ஆணவத்தை எதிர்த்த, அடிமைத்தனத்தை முறித்துப்போட்ட, உரிமைகளை வென்றெடுத்த பல நூறு போராட்டங்களை உலகம் கண்டுள்ளது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கன்று.
ஓரிடத்தில் பணம், ஓரிடத்தில் நிறம், ஓரிடத்தில் சாதி, பல இடங்களில் மதம் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் மாறியுள்ளன. ஆனால் போராட்டமும், போராட்ட உணர்வுகளும் காலகாலமாக  மாறாமலே உள்ளன.
அந்தப் போராட்டங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வெறும் வரலாற்று அறிவிற்காக மட்டுமில்லை. ‘அல்லவை தேய அறம்  பெருகும்’ என உணர்ந்து,   தீயவைகளை எதிர்த்துப் போராடும் போர்க்குணத்தை வளர்த்துக் கொள்வதற்காகவும் போராட்டங்களை அறிதல் அவசியமாகின்றது.
உலகப் போராட்டங்கள் ஒருபுறம் இருக்கட்டும். உள்ளூர்ப் போராட்டங்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா….! அதற்காகவே இந்தக் கட்டுரைத் தொடர்.

தமிழக வரலாற்றில் 1916-1925 என்பது ஒரு முதன்மையான காலகட்டம். ஒரு திருப்புமுனைக் காலகட்டம் என்றும் கூறலாம். இன்று இந்தியாவிலும்,  தமிழகத்திலும்  உள்ள  பல இயக்கங்கள் உருப்பெற்றது அந்த வேளையில்தான்.
நீதிக்கட்சி என அறியப்படும் தென்னிந்திய நலஉரிமைக் கழகம், தனித்தமிழ் இயக்கம் இரண்டும் 1916 ஆம் ஆண்டு தமிழகத்தில் தோன்றிய இயக்கங்கள். அதே ஆண்டு, அயர்லாந்தைச் சேர்ந்த அன்னிபெசன்ட் அம்மையாரால்
இந்திய அளவில், ஹோம்ரூல் இயக்கம் என ஒன்று தொடங்கப்பட்டது. அதற்குப்  பாலகங்காதரத்  திலகர் துணையிருந்தார்.
நேர் எதிரான சித்தாந்தங்களைக் கொண்ட இந்தியப்  பொதுவுடைமைக் கட்சி, ராஷ்டிரிய சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்} இரண்டுமே 1925 இல் இந்தியாவில் வேர் பிடித்தன. தந்தை பெரியார் தொடங்கிய இயக்கம் 1926 ஆம் ஆண்டு தன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் காங்கிரஸ்  கட்சி மட்டுமே இங்கு இருந்தது. பிறகு, மேற்சொன்ன பல கட்சிகளும், இயக்கங்களும்  உருவானபோது, பல்வேறு கருத்துகளும். மோதல்களும் ஏற்பட்டன.
காங்கிரஸ் தேசிய உரிமைகளுக்கும், பொதுவுடைமைக் கட்சி பொருளியல் உரிமைகளுக்கும், சுயமரியாதை இயக்கம் சமூக உரிமைகளுக்கும், தனித்தமிழ் இயக்கம் மொழி உரிமைகளுக்கும், ஆர் எஸ் எஸ் மத உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தன எனலாம்.
அன்றையத் தமிழகம், ஏன் இந்தியாவே, எல்லா உரிமைகளையும் பெற வேண்டிய நிலையிலேயே இருந்தது. அதனால் உரிமைப் போராட்டங்கள் எழுந்தன. குறிப்பாக, இந்தியச் சமூகம் மிகுந்த ஏற்றத்  தாழ்வுகளைக் கொண்டதாகவே இருந்தது.  அதனால் போராட்டங்களும் கூடுதலாகவே இருந்தன.
மேலை நாடுகளில் நிறம் என்பது ஒரு பெரிய போராட்டக் காரணி என்றால்,  இந்தியாவில் சாதி அந்தப் பாத்திரத்தை வகித்தது. வாழ்வின் அசைவுகள் அனைத்தையும் சாதியே இங்கு தீர்மானித்தது.
ஒவ்வொரு சாதியினரும் எப்படிப் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும், என்ன உண்ண வேண்டும், எந்த உடையை உடுத்த வேண்டும், அதனையும் கூட எப்படி உடுத்த வேண்டும், யாரைத்  திருமணம் செய்து கொள்ள வேண்டும், இறந்தால் எந்தச் சுடுகாட்டில் அல்லது இடுகாட்டில் இறுதி நிகழ்வை நடத்த வேண்டும் என்னும் அனைத்தும் சாதியின் அடிப்படையில் மட்டுமே முடிவாயின. அதனால் நாடு சார்ந்த இந்தியப்  பண்பாடு  என்பதோ,  மதம் சார்ந்த இந்து, கிறித்துவ, இஸ்லாமியப் பண்பாடு என்பதோ, மொழி சார்ந்த தமிழ்ப் பண்பாடு என்பதோ  வெறும் விருப்பங்களாக மட்டுமே இருந்தன. சாதியப்  பண்பாடு மட்டுமே நடைமுறை உண்மையாக இருந்தது, இருக்கிறது!
ஆதலால், சாதி அடிப்படையிலான முரண்பாடுகளும், மோதல்களும் இருந்துகொண்டே இருந்தன. அடிமைகளாய் அடங்கிக்கிடந்த சமூகத்தினர் சிலர், சமத்துவம் கோரி எழுந்தபோது, அவை போராட்டங்களாக வடிவெடுத்தன. 1916க்குப் பிறகு தோன்றிய இயக்கங்களின் பின்னணியும், ஆதரவும் இருந்ததால், அவை வீறு கொண்டு எழுந்தன.  பார்க்கப்போகும் போராட்டங்களில் பல, சாதி ஏற்றத்  தாழ்வை மறுத்து உருவான போராட்டங்களே!
அவ்வாறே பண்பாட்டு மேலாண்மையும் (Cultural hegemony) கேள்விக்குள்ளாயிற்று. சமற்கிருதம் மட்டுமே தெய்வமொழி, தேவபாஷை என்ற கருத்துகள் மறுக்கப்பட்டன. கல்விமொழியாய், ஆட்சிமொழியாய, இசைமொழியாய், வழிபாட்டுமொழியாய்த் தமிழே இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.  ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி உரியது என்னும் நிலையும் ஏற்றுக்கொள்ள இயலாதது என்னும் கருத்து வளர்ந்தது.
தொழிலாளர், விவாசாயிகளின் போராட்டங்களை நாடு அவ்வப்போது கண்டது. தொழிற்சங்கங்கள் உருவாயின. தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்கள், கூலி உயர்வுப் போராட்டங்கள் என்று தொழிற்சாலைகளில் போராட்டங்கள் பெருகின.  வேளாண் மக்களிடமும் புதிய விழிப்புணர்ச்சி உண்டானது. அதனால் விவசாயிகளின் போராட்டத்தையும் நாடு கண்டது. அது நிலச்  சீர்திருத்தம் என்னும் அளவில் மட்டும் நின்றுவிடாது, உழுபவர்க்கே நிலம் சொந்தம் என்ற குரலாகவும் மாறிற்று!
நாட்டின் எல்லையைக் கடந்து,  தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, அண்டை  நாடான இலங்கையில் வாழும் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம்  தமிழகத்தில் வீறுகொண்டு எழுந்தது. தங்கள் உயிரை அழித்துக்கொண்டு, ஈழ ஆதரவை வெளிப்படுத்தும் அளவிற்கு அந்தப் போராட்டங்கள் சென்றன.
இந்தியாவிற்கே வழிகாட்டியாய், சமூகநீதிக்கு வழிவகுக்கும் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்தன. இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலில் பல திருத்தங்களுக்கு உள்ளானபோது, அதில் ஒரு முதன்மையான  திருத்தத்திற்குத் தமிழ்நாடே காரணமாக இருந்தது. சட்டத்தையே எரித்தால்,   என்ன தண்டனை என்று புரியாமல்,அதற்கென ஒரு தனிச் சட்டத்தை இயற்ற வேண்டிய சூழலையும் தமிழ்நாடு உருவாக்கிற்று,
இப்படிப் பல்வேறு அடிப்படைகளில் போராட்டங்கள், 1920 முதல் 2020 வரையில், ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டில்  நிறைந்து வழிந்தன. அவை பற்றிய ஒரு தொகுப்பே இத்தொடர். 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற பி அண்ட் சி ஆலைத்  தொழிலாளர் போராட்டம் தொடங்கி, இப்போது நடந்து கொண்டிருக்கும் சாத்தான்குளம் இரட்டைக் கொலை எதிர்ப்புப் போராட்டம் வரையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற  அனைத்தையும். ஒரு பறவையின் பார்வையில் நாம் பார்க்கப் போகிறோம்!
தொடங்குவதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விட விரும்புகின்றேன். இங்கு இடம்பெறப்போகும் எந்தக் கட்டுரையும் களஆய்வு செய்து எழுதப்படும் ஒன்றில்லை. ஏற்கனவே இப்போராட்டக்ங்கள் அனைத்தைப் பற்றியும் நிறைய நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. அவற்றின் சுருக்கமான தொகுப்பாகவும், அவற்றின் மீதான என் பார்வை, விமர்சனம் ஆகியனவற்றைக் கொண்டதாகவும் மட்டுமே  இத்தொடர் அமையும்.  ஆகவே ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும், பயன்பட்ட நூல்களின் பட்டியல் தரப்படும். விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோர், அவற்றைத் தேடிப்படித்துக் கொள்ள அது உதவும்.
போராட்டங்கள் குறித்து, மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதியுள்ள சில வரிகளுடன் இந்த முன்னுரையை நிறைவு செய்கிறேன்.

“எதற்காக இன்குலாப்

போராட்டத்தை எழுதுகிறாய்?

காதலிக்கும் வயதைக்

கடந்து விட்டாயா?

அரட்டை அடித்துச்

சிரிக்காதபடிக்கு

எந்திரமாகவா

ஆகிப்போனாய்?

பார்…

விடிகாலைத் திரையில்

எத்தனை

மகிழ்ச்சிச் சித்திரங்கள்!

………………………………..

போ இன்குலாப்

வாழ்க்கை என்பது

காதலின் கடிதம்.

புன்னகை-

அதன் கையெழுத்து”

நண்பன் சொன்னான்!

நண்பா!

விடிகாலை என்பது

ரம்மியமானதுதான்.

உறக்கத்தில் இசைக்கும்

கனவுக் குயில்களைக்

கொசுக்களின் ரீங்காரம்

துரத்தாமல்  இருந்தால் ….

இன்று என் விடிகாலை

குடங்கள் உருள்வதிலும்

குரல்கள் தடிப்பதிலும்

எனக்குப்

பூபாளம் இசைத்தது.

எனது வாழ்க்கை

களவாடப்பட்டது

எனது புன்னகை

கைது செய்யப்பட்டது!

போராட்டம்

என் பிறப்பின் நியதி

போராட்டம்

என் வாழ்வின் நியதி

போராட்டம்

என் முடிவின் நியதி!

 
வாருங்கள் களம் புகுவோம்!
-சுப. வீரபாண்டியன்-
Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.