Random image

வலி – பசியில் வாடும் மன்னர்கள்

சின்ன வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிப்பதில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. என் மூத்த அண்ணன் எஸ்பி. முத்துராமன் அப்போது ஏவி.எம்மில் உதவி இயக்குனராக இருந்தார். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர் ஏற்கவில்லை. கடிந்து கொண்டார். இந்த ஆசையை விடு, படிப்பில் கவனம் செலுத்து என்றார். அப்போது எனக்கு அது கசப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் விருப்பத்தை  ஏற்று, கோடை விடுமுறையில் அண்ணன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் படப்பிடிப்புற்கு அழைத்துச் செல்வார்.

அது ஒரு பளபளப்பான உலகம். இயக்குனர்கள், பெரிய நடிகர்கள் வரும்போது அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பும், அவர்களின் பணம், புகழும் மீண்டும் அந்த ஆசையை எனக்குள் தூண்டும். எப்படியாவது நடிகர் ஆகி விட வேண்டும் என்று ஓர் எண்ணம்  பெரிதாக உருவெடுக்கும். பட்டம் பெற்று வெளியில் வந்த பின் மீண்டும் அண்ணனிடம் அந்த ஆசையை வெளிப்படுத்தினேன்..அப்போது அவர் இயக்குநராகி, தன் முதல் படமான ‘கனிமுத்துப் பாப்பா’வை இயக்கிக்  கொண்டிருந்தார். எனினும்,  நிதானமாகப் பல செய்திகளை எனக்கு எடுத்துச் சொன்னார். “திரையுலகில் உச்சத்தில் இருக்கும் சிலரைத்தான் நீங்கள் எல்லோரும் பார்க்கின்றீர்கள். மலையின் மேலே ஏறி நிற்பவர்கள் எல்லோரின் கண்களுக்கும் தெரிகிறார்கள். ஆனால் அந்த மலைக்குக் கீழே நசுங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றி உங்களில் யாருக்கும் தெரியாது” என்றார்.

“இதில் நிரந்தரமாக வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. உன் படிப்புக்கேற்ற வேலை தேடு” என்று அறிவுரை சொன்னார். அவர் அன்று சொன்னது உண்மைதான் என்று பல ஆண்டுகளுக்குப் பின்புதான் தெரிந்து கொண்டேன். இப்போது அந்த நடிகர்கள் பலரை நேரில் பார்த்தபோது அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் உண்மையானது என்பதைப்  புரிந்துகொள்ள முடிந்தது.

திரைப்படத் துணை நடிக, நடிகையர் (Junior artists) என்று அழைக்கப்படும் அவர்களின் வாழ்க்கை, காசுகளால் நிரம்பாமல், கனவுகளால் மட்டுமே நிரம்பியுள்ளது.. துணை நடிகர்கள் என்று தாங்கள் அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் “சக நடிகர்கள்” என்று கூறுகின்றனர். அவர்களுக்கென்று, சென்னை, வடபழனியில், “தென்னிந்திய வெண்திரை சகநடிகர் சங்கம்” என்னும் ஓர் அமைப்பு உள்ளது. அந்த சங்கத்தில்தான் ஒரு மாலையில் அவர்களுள் பலரையும் சென்று சந்தித்தேன். தயாரிப்பு நிர்வாகிகள் நாச்சியார்புரம் நாகப்பன், பாலகோபி, சக நடிகர்களுக்கான முகவர் (ஏஜென்ட்) விஸ்வம் ஆகியோர் ஏற்படுத்திக் கொடுத்த தொடர்பில், அவர்கள் அலுவலகம் சென்றபோது, அச்சங்கத்தின் தலைவர் எம். ஜனார்த்தனன் ராவ், செயலாளர் எம்.ஆர்.கே. கணேஷ் பாபு,பொருளாளர் டி.சிவா ஆகியோர் அன்புடன் வரவேற்று, சக நடிகர்கள் பலரையும் அறிமுகம் செய்து வைத்தனர்.

அந்த சங்கத்தைச் சேர்ந்த 20, 30  சக நடிகர்கள் அங்கு இருந்தனர்.அவர்களோடு பேசத் தொடங்கியபோதுதான், அவர்களின் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் நிறைந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.அந்த சங்கத்தின் உறுப்பினர்களாக சுமார் 700 பேர் உள்ளனர். தற்காலிக உறுப்பினர்களாக இன்னொரு ஆயிரம் பேர் உள்ளனர்.

40 வருடங்களுக்கும் மேலாக இதே துறையில் சக நடிகர்களாகப் பணியாற்றி வரும், வயது முதிர்ந்த, டி.எஸ். ராஜன், பெருமாள், சக்திவேல், ராஜி ஆகியோரையும், 15, 20 வருடங்களாக நடித்துவரும் கலைவாணி, செல்லவேல் முதலானவர்களையும், இந்தத் துறைக்கு வந்து ஒன்றரை வருடங்களே ஆன ஜெய்குமாரையும் இன்னும் பலரையும் அன்று சந்திக்க முடிந்தது.

60 வயதைத் தாண்டிய ராஜி என்னும் அம்மா, “பத்து வயசிலே ஆந்திராவிலேருந்து வந்தேன். இப்ப வந்த ப.பாண்டி வரைக்கும் நடிச்சிருக்கேன் (பூக்காரம்மா வேடம்). ஒன்னும் சேக்க முடியலே. உறவுகளும் செத்துப் போச்சு. அனாதையா நிக்கிறேன்” என்றபோது, கேட்பதற்கே சற்றுக் கடினமாக இருந்தது.

ஏன் இப்படி? இத்தனை ஆண்டு உழைப்பு இவர்களுக்கு ஏன் செல்வத்தைக்  கொண்டு வந்து சேர்க்கவில்லை? படங்களில், மன்னர்களாகவும், நீதிபதிகளாகவும், ஜமீன்தார்களாகவும் நடிக்கும் இவர்கள் ஏன் நடைமுறை வாழ்வில் வறுமையோடு போராட வேண்டியுள்ளது?

அவர்களுக்கு ஒருநாள் வேலை (கால் ஷீட் ) என்பது எட்டு மணி நேரம். அதற்குரிய ஊதியம் ரூ. 525/  மட்டுமே. அதில் 20% பணம், நடிக்கும்  வாய்ப்பைப் பெற்றுத் தரும் முகவருக்குப் போய்விடும். மீதம் ரூ.420/ கிடைக்கும். இதில் மிகப் பெரிய துயரம் என்னவென்றால், அந்தப் பணம், படப்பிடிப்பு முடிந்த அன்றே  அவர்களின் கைக்கு வந்துவிடாது என்பதுதான்.  சாதாரணமாக, இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். ஒரு வருடம், இரண்டு வருடம் ஆகியும் வராத தொகைகள்  உள்ளன. நான் அங்கு போயிருந்தபோது, நவம்பர் மாத பில் ஒன்று வந்திருந்தது. அதனை வாங்கிச் செல்லவே அந்த நடிகர்கள் அங்கு வந்திருந்தனர். பாதியில் நின்று போய் விடுகிற படங்கள்தாம் மிகுதி. அந்த நிறுவனங்களிலிருந்து (கம்பெனி) பெரும்பாலும் பணம் வராது  என்கின்றனர். வராமல் நிற்கும் பணத்தை வாங்கித் தருவதுதான் சங்கத்தின் முதன்மையான பணி.

ஒரு மாதத்தில்  எவ்வளவு நாள் வேலை இருக்கும் என்று கேட்டபோது,  அவர்களிடமிருந்து ஒரு விரக்தியான புன்னகை வெளிப்பட்டது. ‘அதிகம் போனால்,10 முதல் 15 நாள்கள் இருக்கும். அது சிலருக்குத்தான். 5 முதல் 10 நாள்கள்தான் பொதுவாக எல்லோருக்கும்  வேலை இருக்கும்  என்று கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், சராசரியாக, மாதம் 4000 முதல் 5000 ரூபாய்தான் ஊதியம் கிடைக்கிறது. இன்றைய விலைவாசியில் அதனை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? படத்தில் வெறுமனே தோன்றுவதோடு நிற்காமல், ஏதோ ஒரு சில வசனங்கள் இருந்தால் கூடுதலாக 100 ரூ கிடைக்குமாம்!

வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் சில நன்மைகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோமே என்றபோது, ‘உணமைதான் என்றவர்கள் ‘இப்போது அவுட்டோர்ங்கிறதே கெடையாதே’ என்றனர். வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் ஒரு நாள் வேலைக்கு ஒன்றரை  நாள் ஊதியம் உண்டாம். அது மட்டுமல்லாமல், எல்லோரும் சேர்ந்து பயணம் போவது, அங்கு மகிழ்ச்சியாகச் சில நாள்கள் தங்கியிருப்பது போன்ற அனுபவங்கள் இருக்கும். இப்போது எல்லாம் போய்விட்டது என்றார்கள். ஏன் என்று கேட்டேன்.”என்னிக்கு நம்ம படங்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியூர்க் கிராமங்களுக்குப் போச்சோ, அன்னிக்கே எங்க வேலையும் போச்சு” என்றனர். அந்தந்த கிராமத்து மக்களையே ‘எதார்த்த திரைப்படம்’ (ரியலிசம்) என்ற பெயரில் நடிகர்கள் ஆக்கி  விடுகின்றனர். எனவே உள்ளூரில் படப்பிடிப்பு  நடந்தால்தான் இவர்களுக்கு வாய்ப்பு என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

உங்கள் பாத்திரங்களுக்குத் தேவையான உடைகளை எல்லாம் தந்து விடுவார்கள்தானே என்று கேட்ட போது, “ராஜா ராணி படம்னா குடுப்பாங்க. போலீஸ், வக்கீல்ன்னா குடுப்பாங்க.மத்த எல்லாத்துக்கும் நாம நம்ம சொந்த டிரஸ்தான் எடுத்துகிட்டுப் போகணும்” என்று விடை வந்தது. “ஒரு பட்டுப்பொடவை, பட்டு வேஷ்டி ரெடியா வச்சிருப்போம். நாளைக்கு கல்யாண சீன்னு சொன்னா, அத உடுத்திக்கிட்டுப் பொறப்புடுவோம்” என்றார்கள். பட்டுப் புடவைக்குள் இப்படி ஒரு சோகம் இருப்பது புரிந்தது.

ராஜ்காந்த்  என்று ஒரு சக நடிகரைச் சந்தித்தேன். 30 ஆண்டுகளாக நடிப்பதாகச் சொன்னார். உங்கள் இயற்பெயர் இதுதானா என்று கேட்டேன். இல்லை, ராஜ்குமார்தான் என் பெயர். ரஜினிகாந்த், விஜயகாந்த் மாதிரி வந்துவிட மாட்டோமா என்கிற ஆசையில் பெயரை மாற்றிக் கொண்டேன் என்றார். பெயர் மாற்றிய பின் ஏதேனும் முன்னேற்றம் வந்ததா என்று கேட்டேன்.’ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு காந்தாகவும் ஆக முடியவில்லை. யோசிச்சுப் பாத்தா 30 வருஷந்தான் ஓடிப்போச்சு” என்று சோகம் கலந்த புன்னகையோடு விடை தந்தார். க ண்ணுக்குத் தெரிந்து இவர். இன்னும் எத்தனை எத்தனை ‘காந்துகள்’ அந்த உலகில் உள்ளனரோ தெரியவில்லை.

 

 

 

 

 

(படம் – காதல் திரைப்படத்தில் வரும் விருச்சிககாந்த்)

மனோரமா, சுருளிராஜன், செந்தில் எல்லோருமே இந்த சங்கத்தில் முதலில் இருந்தவர்கள்தானாம். பிறகுதான் முன்னேறிப் பெரிய நடிகர்கள் ஆகியுள்ளார்.அப்படிப்பட்ட நம்பிக்கையில்தான், திரைப்படக் கல்லூரியில், நடிப்புத் துறையில் படித்துப் பட்டம் பெற்ற  ஜெயக்குமார் போன்ற இளைஞர்கள் இங்கு உள்ளனர். பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிலர் இந்த சங்கத்திற்கு உதவிகளும் செய்துள்ளனர் என்றும் மறக்காமல் அவர்கள் குறிப்பிட்டனர்.

1958 ஆம் ஆண்டு அந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் ஒரு விழாவிற்கு வந்துள்ளார். “என்னய்யா சினிமாகாரங்க சங்கம்ன்னா, ரொம்பப் பெருசா இருக்கும்னு நெனைச்சேன். இப்பிடி தன்னிலேயும், சேத்துலேயும் இருக்கே” என்றாராம்.

உங்கள் குறைகள் தீர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். எல்லோரும் ஒரே குரலில், “அன்னிக்கன்னிக்குப் பணம் கொடுத்தாலே போதும்” என்றார்கள். “வியர்வை அடங்குமுன் கூலியைக் கொடுத்துவிட வேண்டும்” என்ற திருக்குரானின் வரியே என் நினைவுக்கு வந்தது. “முந்தியெல்லாம், அப்பிடிக் குடுத்தாங்க அய்யா, இப்பதான் எல்லாம் மாறிப்போச்சு” என்றார் ஒரு பெரியவர். குறிப்பாக, ஜெமினி வாசன், என்.டி.ஆர் இருவரும் உடனே பணம் கொடுத்து விடுவார்களாம்.’தேவர் கம்பெனி, முக்தா பிலிம்ஸ் எல்லாம் கூட அப்படித்தான்” என்றார் இன்னொருவர்.

“பணம் மட்டுமில்லே, மரியாதையும் வேணும்” என்றார் இன்னொரு நடிகர்.  ஆம், சுயமரியாதை வாழ்வின் முதல் தேவை அல்லவா?  ‘சில இயக்குனர்கள் மரியாதை இல்லாம திட்டுவாங்க, சிலர் அடிச்சும் போட்ருவாங்க’ என்றும் சிலர் கூறினர். இளம் நடிகைகளுக்கு வேறு மாதிரியான தொல்லைகளும் இருக்கவே செய்யும்.

இவர்களின் வலியைக் காலம் போக்க வேண்டும்; இவர்கள் வாழ்வில் மாற்றம் வர வேண்டும்.

அன்புடன்
– சுபவீ –