எங்கள் உறவினர் இல்லத்தில் ஒரு மரணம். 35 வயதில் அந்த இளைஞர் ஒரு விபத்தில் இறந்துபோய் விட்டார். இளம்வயது மனைவியும், ஒரு மகனும் அழுது கதறிய காட்சி, நெஞ்சை உலுக்கியது. வைதீக அடிப்படையில் சடங்குகள் நடந்தன. இறுதியில் பிணத்தைப் பாடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். அந்தப் பெண் அழுதுகொண்டே உள்ளே வந்தார். அப்போது, “எல்லாரும் முகத்த அந்தப் பக்கம் திருப்பிக்கிங்க” என்று உரக்கக் குரல் எழுப்பினார்கள். ஏன் என்று புரியவில்லை. என் மனைவி விளக்கம் சொன்னார். “அந்தப் பொண்ணு உள்ள போயி குளிச்சிட்டு வர வரைக்கும் அது முகத்த பாக்கக் கூடாதாம்” என்றார். எனக்குத் தாள முடியாத சினம் ஏற்பட்டது. மரணத்தை விட இது கொடுமையானதாகத் தெரிந்தது.

இப்படிப் பல்வேறு சமூகங்களிலும், பல்வேறு விதமான சடங்குகள் உள்ளன. அவை எல்லாவற்றிலும் உள்ள ஓர் ஒற்றுமை, துணைவரை இழந்த பெண்களை இழிவு படுத்துவதும், அவர்களை மேலும் துயரத்திற்குள்ளாக்குவதும் தான். தன் துணைவரை இழந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறாமல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இந்தச் சமூகம் அவளை மேலும் கொடுமைப் படுத்துகிறது.

கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துபோனால், கணவனுக்கு ஒரு சட்டம், மனைவிக்கு ஒரு சட்டம் என்பது நெடுநாளாகவே இங்கு இருந்து வருகின்ற கொடுமை என்று கூற வேண்டும். கணவன் இறந்தவுடன் மனைவி இறந்துபோய் விட வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்த்தது. அதனைத் ‘தலைக்கற்பு’ என்று வேறு சொல்லிப் பாராட்டியது.  அவ்வாறு தானாக இறக்காத பெண்களை, கணவன் பிணத்தை  எரிக்கும் நெருப்பில் தூக்கிப் போட்டு எரித்த காலமும் இங்கு இருந்தது. இன்றும் ஒளிவு மறைவாக, வடநாட்டில் சில பகுதிகளில் அந்த பழக்கம் உள்ளது. அதற்கு ‘சதி’ என்று பெயர். தமிழ்நாட்டில் ‘உடன்கட்டை ஏறுதல்’ என்று அழைக்கப்பட்டது.

தானாக மடிந்து போவது அல்லது பிறரால் கொல்லப்படுவது என்னும் இரு கொடுமைகளிலிருந்து தப்பிவிட்டாலும், கைம்பெண் (விதவை) வாழ்வு என்னும் தண்டனையிலிருந்து பெண்கள் தப்ப முடியாது. சமூக சீர்திருத்தக் கருத்துகள், கல்வி வளர்ச்சி,பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு ஆகியனவற்றால் இன்று ஓரளவு நிலை சீரடைந்துள்ளது என்றாலும், முழு மாற்றம் நிகழவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரையில் உடன்கட்டை ஏறுதல் (ஏற்றுதல்) என்னும் சொல்லொணாத் துயரம் இங்கு அரங்கேறிக் கொண்டுதான் இருந்தது. என்னதான் அன்பு வைத்திருந்தாலும், நெருப்பு சுடத்தானே செய்யும். அந்தச் சூடு தாங்காமல் வெளியில் ஓடி வரும் பெண்ணை, சுற்றி நிற்கும் ஆண்கள், மூங்கில் கழிகளால் தாக்கி மீண்டும் நெருப்பின் உள்ளே போடுவார்கள். தன் அண்ணி அப்படிக் கொல்லப்பட்டதைப் பார்த்த ராஜா ராம் மோகன் ராய் போன்றவர்களின் முயற்சியால், பிறகு அது சட்டப்படி ஒழிக்கப்பட்டது. அதற்கும் பெரிய எதிர்ப்பு எழுந்தது. கிறித்தவர்களான ஆங்கிலேயர்கள், இந்துமத வாழ்க்கை முறையில் தலையிடுகின்றனர் என்ற குற்றச்சாற்று.

உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிந்த பின்பு, கைம்மைக் கொடுமை மேலும் வலிமை பெற்றது. இது சங்ககாலம் தொட்டு இருந்து வருகின்றது என்பதற்குப் புறநானூற்றில் உள்ள பெருங்கோப்பெண்டுவின் பாடலே சாட்சியாக உள்ளது. தன் கணவன் இறந்தவுடன் தீப்பாய முயலும் அந்த அரசியை அமைச்சர்கள் தடுக்கின்றனர். உயிர் வாழ்ந்து கைம்மைத் துன்பத்துக்கு ஆளாவதை  விட, இறப்பதே மேல் என்கிறார். ஓர் அரசியின் நிலையே அப்படி இருந்திருக்குமானால், சாதாரணப் பெண்களின் நிலை  என்னவாக இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.  சிலம்பும், “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்றுதான் கூறுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் இந்நிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. வெள்ளைச் சேலைதான் கட்டிக் கொள்ள வேண்டும். பொட்டு , பூ வைத்துக் கொள்ளக்கூடாது. எந்த கைம்பெண்ணைப் பார்த்தும் எந்த ஆணுக்கும் ஆசை வந்து விடக்கூடாது என்பதில் சமூகம் கவனமாக இருந்தது.

ஒரு போர்க் காலச் சமூகத்தில், போரில் ஆண்கள் இறந்துபோய் விடுவதால், பெண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். அந்தக் கூடுதல் பெண்களை என்ன செய்வது என்று வருணாசிரம சமூகம்  கவலைப்பட்டது. அதற்கான தீர்வாகத்தான் இந்த வழிமுறைகளை இந்து மதம் நடைமுறைப்படுத்தியது. இஸ்லாம் வேறு முறையைக் கையாண்டது. ஓர் ஆண் நான்கு பெண்கள் வரையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றது.  கைம்பெண்களைத்  திருமணம் செய்து கொள்ள  வேண்டும் என்பது அடிப்படை.

இன்று கணவனை இழந்த இந்துப் பெண்கள் வண்ணச் சேலைகளை உடுத்திக் கொள்கின்றனர். சின்னதாகப் பொட்டு வைத்துக் கொள்கின்றனர். கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடித்து மூலையில் உட்கார வைத்த பார்ப்பனர்களின் சமூகத்தில் கூட இன்று ஓரளவு மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இவற்றினால் எல்லாம் பெண்களின் வலி முழுமையாகத் தீர்ந்து விடும் என்பதில்லை. அவர்கள் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை சட்டத்தில் இருந்தால் மட்டும் போதாது. அது ஓர் எளிய நடைமுறையாக மாற வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் உணர்ச்சிகள் சமமானவை என்பதோடு அவை இயல்பானவையும் கூட!  காம உணர்வுகளைத் தாண்டி, வாழ்வில் ஒரு துணை வேண்டும் என்பதும் இருவருக்கும் பொதுவானது.

இயற்கையின் விதிகளை மீறவோ, ஒருவர் வாழ்வின் தேவைகளில்  இன்னொருவர், குறுக்கிடவோ எவருக்கும் உரிமையில்லை.

அன்புடன்
– சுபவீ –