Random image

வலி – தாயின் அன்பும் தவறிப் போனது!

என்னை ஆசிரியராகக் கொண்ட ‘கருஞ்சட்டைத் தமிழர்’, மாதமிருமுறை இதழின், அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், உதவி ஆசிரியராகப் பணியாற்றிய தோழர் உமா, மாடி அலுவலகத்தில் உள்ள வெண்ணிலா என்னும் பெண் உங்களைப்  பார்க்க விரும்புகிறார்.வரச் .சொல்லட்டுமா?”  என்று கேட்டார். “யார் அவர்?’ என்று திருப்பிக் கேட்டேன். “தொலைகாட்சி நிகழ்ச்சியில் எல்லாம் பங்கேற்கும் ரோஸ் அலுவலகத்துக்கு வருவார். இவரும் திருநங்கைதான்” என்றார்.

அடுத்தநாள் வெண்ணிலாவைச் சந்தித்தேன். சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். என் உரைகளைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பதாகவும், பிடிக்கும் என்றும் கூறினார். 20-25 வயது இருக்கலாம்.  “12 வயதில் நான் என்னை ஒரு பெண்ணாக .உணரத் தொடங்கினேன். அன்றிலிருந்தே சிக்கல்கள் தொடங்கி விட்டன. குடும்பத்தில் எல்லோரும் என்னை வெறுக்கத் தொடங்கி விட்டார்கள்” என்றார். அரை மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்திருப்பேன். புறப்படும் வேளையில்,  ” பெண்கள் எங்களை அந்நியமாகப் பார்க்கிறார்கள். ஆண்கள் எல்லோரும் எங்களைத் தப்பாகப் பார்க்கின்றார்கள். எந்த ஆணோடு பழகினாலும், உடனே அவர்கள்,  மாமா’ன்னு கூப்பிடு என்கிறார்கள். எங்களுக்கு அண்ணன்  தம்பி, அப்பா என எந்த உறவும் இல்லையா, எல்லோரும் மாமாதானா?’ என்று கேட்டபோது, நெஞ்சம் கனத்தது.

விடைபெற்றுக் கிளம்பிய வெண்ணிலாவிடம், ” நீ எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம். எல்லோரையும் தோழமையுடன் நேசிக்கும் மனிதர்கள் இங்கு இருக்கிறோம்” என்றேன். “சரி  சார்” என்றது அந்தப் பெண்.  “சார் வேண்டாம், என்னை இனி நீ அப்பான்னு கூப்பிடு வெண்ணிலா” என்றேன். அப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியும், கண்களில் ஒரு துளிக் கண்ணீரும் தெரிந்தன. அந்தக் காட்சி நெடுநாள் என் நெஞ்சிலேயே  நின்றது.

என் பள்ளிப் பருவத்திலேயே திருநங்கையரை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்களைப் பார்த்தவுடன் ஒரு கேலிச் சிரிப்பு. ‘டேய், அலிடா’  என்பான் ஒருவன். ஓர் எண்ணைச் சொல்லிக் கேலி செய்வான் இன்னொருவன். என் பங்கிற்கு நானும் ஏதோ சொல்லிக் கேலி செய்திருப்பேன். அவர்களின் வலி தெரியாத பேதைமை நிறைந்த காலம் அது!

1970களின் தொடக்கத்தில் கவிஞர் நா.காமராசனின் கவிதை நூல் ஒன்றில், ‘காகிதப் பூக்கள்’ என்னும் கவிதை ஒன்றிருந்தது. அது திருநங்கையரைப் பற்றியது.

“சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள்

காலத்தின் பேரேட்டைக்  கடவுள் திருத்தட்டும்”

என்று அவர் எழுதியிருந்தார். ‘ஆசிரியர்கள் திருத்தினால் சரியாகத் திருத்த மாட்டார்கள் என்று கருதி, கடவுளைத் திருத்தச் சொல்கிறார் போலிருக்கிறது’ என நினைத்துக் கொண்டேன். மரபு அணுக்களில் ஏற்பட்ட பிறழ்வைத்தான் அவர் சந்ததிப் பிழை என்று சொல்கிறார் என்பது புரிந்தது. அதனைக் கடவுள்தான் திருத்த முடியும் என்றால், அந்தப் பிழையைச் செய்தவர் யார் என்றும் எனக்குள் ஒரு வினா எழுந்தது.

இவையெல்லாம் அவர்களைப் பற்றிய பொழுது போகாதவர்களின் ஆராய்ச்சி. அவர்களுடன் தோழமை கொண்டு எழும் சக மனிதப் பார்வை அன்று. அந்தப் பார்வை, மேலும் காலம் தாழ்ந்தே எனக்குள் வந்தது. சமூக அவலங்களைப் புரிந்து கொள்ளும் நிலை, தாமதமாகவே வந்துள்ளது என்பது வெட்கப்படக் கூடியதுதான்.

நர்த்தகி நடராஜ், அவரின் தோழி சக்தி ஆகியோருடன் ஏற்பட்ட நட்பு, மேலும் அவர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவியது. நர்த்தகியைப் பற்றி, ‘இளமை என்னும் பூங்காற்று’ என்னும் என் நூலிலும் எழுதியுள்ளேன். அது கூட தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான். ஒட்டுமொத்தமாக அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஆயிரம் உள்ளன என்று தோன்றியது.

இந்தியாவின் மக்கள் தொகையில் அவர்கள்  எத்தனை விழுக்காடு  என்பதை இப்போதும்  துல்லியமாக அரசினால் கூடச் சொல்லிட முடியவில்லை. அறிந்தும் அறியாமலும் பலர் அவ்வாறு வாழ்கின்றனர்.தங்களை முழுமையாக உலகிற்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கே வெகு நாள்கள் ஆகின்றன. குடும்ப அச்சம், சமூக அச்சம் காரணமாகப் பலர் ரகசிய வாழ்வினையே மேற்கொண்டுள்ளனர். மருத்துவர் மனோரமா அவர்களின் மருத்துவமனையில் ஓர் ஆணை நான் பார்த்தேன். பழகியபின்தான் தெரிந்தது, அவர் திருநங்கை என்று! ரகசியமாக, தன் மனைவிக்கும், வளர்ப்புப் பிள்ளைக்கும் தெரியாமல், சேலை கட்டி, தலை நிறையப் பூ வைத்து அவர் எடுத்துக் கொண்ட படத்தை என்னிடம் காட்டினார். மருத்துவர், அம்மாவுக்கு மட்டும் தெரியும் என்றார். இப்படிப் பலர் உள்ளனர்.

வெளிப்படையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் இரு வகையினர். ஆணாகப்  பிறந்து பெண்ணாகத் தம்மைக் கண்டுகொண்டவர்கள் திருநங்கையர்கள். பெண்ணாகப் பிறந்து ஆணாகத் தங்களைக் கண்டறிந்தவர்கள் திருநம்பியர்கள். ‘திருநர்’ என்னும் சொல்லைப் பொதுச் சொல்லாகப் பயன்படுத்துகின்றார்கள். ஒப்பீட்டளவில், திருநம்பியர்கள் எண்ணிக்கையில் குறைவுதான். மூன்றாம் பாலினத்தர்,  மாற்றுப் பாலினத்தர் ஆகிய சொற்களும் வழக்கில் உள்ளன.

இவர்கள் சந்திக்கும் சமூக, மருத்துவ, சட்டச் சிக்கல்கள் பல உள்ளன. சமூகச் சிக்கல்கள் மாறுமானால், மற்றவையும் மாற வாய்ப்புண்டு. இவர்களைப்  பற்றிய புரிதல் இப்போதுதான் மெதுவாகச் சமூகத்தில் வந்து கொண்டிருக்கிறது. நாம் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பதில் பெருமை கொள்ளவோ,  திருநராக இருப்பதில் அவமானம் அடையவோ ஒன்றுமில்லை. ஆனாலும் பெரும்பான்மை மட்டுமே உலகில் எல்லாவிதத்திலும் ஆட்சி செய்கிறது. சிறுபான்மையினர் எல்லாத் தளங்களிலும் தங்கள் உரிமைகளைப்  பல வேளைகளில் இழந்தே நிற்கின்றனர்.

பொதுவாக, குற்றம் செய்தவர்களைக் கூட, சமூகம் வெறுத்தாலும், குடும்பம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் இவர்கள் முதலில் குடும்ப உறுப்பினர்களால்தான் வெறுக்கப்படுகின்றனர். பெற்றோரின் அன்பு கூட இல்லாமல் வளர்கின்றனர்.  வேறு வழியின்றிப் பலர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். தெருக்களில், தொடர்வண்டிகளில் கைகளைத் தட்டியபடி பிச்சை எடுக்கின்றனர் என்றும், பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றம் சாற்றும் சமூகம், அவர்களுக்கு எந்த  வேலையும் வழங்குவதில்லை. பொது இடங்களில் அவர்களுக்கென்று தனிக் கழிப்பறைகளும்  இல்லை.

குடியிருப்பதற்கான வீடுகள் கூட அவர்களுக்குக்  கிடைப்பதில்லை. எந்த நேரம் வீட்டின் உரிமையாளர் தங்களைக் காலி செய்யச் சொல்வாரோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டுள்ளனர்.

எனினும் வடநாட்டில் இவர்களுக்கு ஒரு மதிப்பு உள்ளது. வீட்டில் நல்லவைகள் நடக்கும்போதும், கடை திறப்பு போன்ற நிகழ்வுகளிலும், திருநங்கையர்களை அழைத்து வாழ்த்தச் சொல்கின்றனர். அது மிகவும் நல்லது என்னும் நம்பிக்கை அங்குள்ளது. அதற்காகப் பணம் கூடக் கொடுக்கின்றனர்.

உள்ளத்தால் மட்டுமின்றி, உடலாலும் மாறிவிட வேண்டும் என்று திருநர்கள் விரும்புகின்றனர். அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். முதலில் மும்பையில் இது மாதிரியான மருத்துவ முறை இருந்துள்ளது, இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது. அதற்காகவே சிறப்பு மருத்துவமனைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக, பெங்களூரு, கடப்பா, திண்டுக்கல் முதலிய ஊர்களில் நல்ல மருத்துவமனைகள் உள்ளன என்று கூறுகின்றனர்.

எனினும் இந்த மருத்துவ சிகிச்சை மிகவும் கடினமானதும் கொடூரமானதாகவும் இருந்துள்ளது. மயக்க மருந்து கூட இல்லாமல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போது எஸ்.ஆர்.எஸ். அறுவை சிகிச்சை (SRS Surgery – Sex Reassignment Surgery) என்னும் நவீன முறை உலகில் வந்துள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில் இச்சிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகின்றது என்கின்றனர்.  இதன் தனிச் சிறப்பு, இந்த அறுவைக்குப் பின் தோற்றத்தில் மட்டுமின்றி, உண்மையாகவே ஆண் -பெண் உறவுக்கும் வாய்ப்புள்ளது என்பதுதான். இருப்பினும், காலப்போக்கில் சதை கூடி வந்துவிடுகிறது என்று இச்சிகிச்சை எடுத்துக் கொண்ட ஒரு திருநங்கை கூறுகின்றார்.

அடுத்த கட்டத்தை நோக்கி மருத்துவம் இப்போது முன்னேறுகிறது. இருதயம், சிறுநீரகம் மாற்றுச் சிகிச்சை போல, இவர்களுக்குக் கர்ப்பப்பை மாற்று சிகிச்சை (Uterus transplantation) செய்ய அமெரிக்காவில் ஆய்வுகள் நடந்து கொண்டுள்ளதாக இணையத்தள செய்திகள் கூறுகின்றன.

2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை இவர்களைக் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றும், 2014 இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றும் இவர்களுக்கான சிறு நம்பிக்கைக் கீற்றுகளைக் கொண்டுள்ளது. இவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து இப்போது அமைப்புகளாகத் திரண்டு வருகின்றனர்.

மூன்றாம் பாலினத்தர் என்னும் பெயரை நீக்கி, திருநர் என்று அழைக்க அரசு ஆணைகள் வேண்டும். (முதல் பால் ஆண் , இரண்டாம் பால் பெண், மூன்றாம் பால் திருநர் என்னும் வரிசை உடைக்கப்பட வேண்டும் இல்லையா?). சாதிச் சான்றிதழ் போல திருநங்கையர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வேண்டும். பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஊதியத்த்துடன் விடுப்பு வழங்க வேண்டும். – இவ்வாறு பல நியாயமான கோரிக்கைகளைத் திருநர்கள் முன்வைக்கின்றனர்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அவர்கள் பாசத்திற்காக ஏங்குகின்றனர். பொறியியல் கல்லூரியில் படிக்கும் கிரேஸ் பானு என்னும் திருநங்கை, தன் அம்மாவிற்கு எழுதியுள்ள ஒரு கடிதம் நம்மை நெகிழ வைக்கிறது.

“அன்புள்ள அம்மா, இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் அன்பு என்று சொல்வான் ரஷ்ய எழுத்தாளன் சிங்கிஸ் ஐத்மாத்தவ். எங்களுக்கு அந்த அன்பு கூட கிடைக்கவில்லையே. என்னிடம் நீ அன்பு காட்டி என்னை ஒரு மகனாக வளர்த்தாய். ஆனால் நான் உன்னுடைய மகளாகவே வளர்ந்தேன். இன்றும் உன் மகளாகவே இருக்கிறேன். மகளாகவே இறப்பேன்.

அம்மா, காலம் ஒரு நாள் மாறும், என்றாவது ஒருநாள் நீ என்னை ஏற்றுக் கொள்வாய். அப்போது நான் ஓடிவந்து உன்னைக் கட்டிப் பிடிப்பேன், முத்தம் கொடுப்பேன். உன்னோடும், அப்பாவோடும், அண்ணனோடும், தம்பியோடும் சேர்ந்து உணவு உண்பேன்.உனக்கும், அப்பாவுக்கும் நான் மகளாய்ச் சில காலம் வாழ்ந்து மறைவேன்.”

கடிதத்தைப் படித்து முடிக்கும்போது  மனசெல்லாம் வலிக்கிறது.

அன்புடன்
– சுபவீ –