அது 1983 ஆம் ஆண்டு –

குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் கல்லூரியில் நான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஜூலை மாத இறுதியில் ஒரு நாள், தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் மக்கள் குமுறி எழுந்தார்கள். ஊரெங்கும் ஊர்வலங்கள். தெருவெங்கும் பொதுக்கூட்டங்கள். இலங்கையில் உள்ள வெலிக்கடை என்னும் ஊரின் சிறையில் தமிழ் ஈழம் கேட்டுப் போராடியமைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் பலர் கொல்லப்பட்டார்கள் என்னும் செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகிய போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும், அவர்களுள் குட்டிமணியின் கண்கள் பிடுங்கப்பட்டன என்பதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குட்டிமணியின் கண்கள் ஏன் பிடுங்கப்பட்டன? நீதிமன்றத்தில் அவர் கொடுத்த வாக்குமூலம் அதற்கான காரணமாக இருந்தது. “நான் இறந்தபிறகு என் கண்களை இன்னொருவருக்குப் பொருத்தி விடுங்கள். என் கண்களாவது மலரப்போகும் தமிழ் ஈழத்தைக் காணட்டும்” என்று அவர் நீதிமன்றத்தில் சொல்லியிருந்தார். அதனால் அன்று வெலிக்கடைச் சிறையில் கொலை வெறியாட்டம் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், குட்டிமணியைக் குறிப்பாகக் கண்டுபிடித்து, அவர் கண்களைப் பிடுங்கிக் கீழே போட்டு, காலில் மிதித்துக் களியாட்டம் ஆடியுள்ளனர். இந்த நிகழ்ச்சிதான் தமிழகத்தில் மக்கள் எழுச்சிக்கு வித்தாகியது.

விடுதலைப் போரில் ஈடுபடும் மக்களின் வலியை அப்போதுதான் நானும் முதன்முதலில் உணர்ந்தேன். கல்லூரி ஆசிரியர் வேலையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தெருவில் நடந்து கொண்டிருந்த ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஏறி அவர்களின் அனுமதி பெற்று, ஈழ விடுதலை பற்றிப் பேசினேன். அதுவே பொதுவாழ்வில் என் முதல் பொதுக்கூட்டம்.

நான் மட்டுமில்லை, தமிழக மக்களே போரின் வலி அறியாதவர்கள்தாம். சேர, சோழ, பாண்டியர் ஆட்சி முடிந்துபோன பின், கடந்த 700, 800 ஆண்டுகளாக நாம் போரை நேரில் பார்த்தவர்களில்லை. இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா போர்களைக் கூட, செய்தித்தாள்களில் படித்திருக்கிறோம், தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம், அவ்வளவுதான்! பஞ்சாபைப் போல, வங்காளத்தைப் போல, காஷ்மீரைப் போல நேரடியாகப் போர்க்களத்தில் நின்றவர்கள் இல்லை. நம் புவியியல் அமைப்பு அப்படி. ஆனால் ஈழ யுத்தம்தான் ஓரளவிற்குப் போருக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் சென்றது என்று கூறலாம். போரின் வலிகளை சற்றேனும் நாம் உணர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது.

ஈழ விடுதலைப் போர் 1970களின் மத்தியில் தொடங்கி 2009 வரையில் ஆயுதப்போராக நடைபெற்றது. ஏறத்தாழ 35 ஆண்டுகள் போரின் நிழலிலேயே அந்த மக்கள் வாழ்ந்தார்கள். வானத்தை நிமிர்ந்து பார்த்த போதெல்லாம், நிலவையும், விண்மீன்களையும் அவர்கள் பார்த்ததை விட, குண்டு போடும் விமானங்களைப் பார்த்த நேரம்தான் மிகுதி.

“தென்னங்கீற்றில் தென்றல் வந்து  மோதும்

என் தேசமெங்கும் குண்டு வந்து வீழும்

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள்

கையில் கூட ஆயுதங்கள் ஏறும்” என்பது அவர்களின் பாட்டு.”

பள்ளிக்கூடம் செல்வது, அலுவலகம் செல்வது, மகிழ்வான திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது, குடும்ப விழாக்களைக் கொண்டாடுவது போன்ற இயல்பான வாழ்வே அவர்களுக்கு மூன்று தலைமுறைகளுக்கு இல்லாமல் போய்விட்டது.

போர்க்களத்தில் அன்றாட வாழ்வை நடத்திய ஈழ மக்களின் துயரை மூன்றாக நாம் பகுத்துப் பார்க்கலாம். நேரடியாக ஆயுதம் ஏந்திக் களத்தில் நின்ற போராளிகள் முதல் வகையினர். அவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட லட்சியத்த்திற்காக எல்லாத்  துன்பங்களையும் எதிர்கொள்ள  முடிவெடுத்துக் களத்திற்கு வந்தவர்கள்.  போரின் இயல்பான அனைத்துக் கொடுமைகளுக்கும் முகம் கொடுத்த சாதாரண குடிமக்கள் இரண்டாம் வகையினர். அவர்கள் பட்ட துன்பங்கள் ஏடுகளில் எழுதி நிரப்ப முடியாதவை. போரினால் பாதிக்கப்பட்டு, தாங்கள் பிறந்த மண்ணையே விட்டுவிட்டு வெவ்வேறு நாடுகளுக்குக் குடியேறிய புலம் பெயர்ந்த மக்கள் மூன்றாம் வகையினர். சொந்த மண்ணை, உறவுகளை, உடைமைகளைக் கைவிட்டு எங்கோ போய் வாழ நேர்வது என்பதும் குறைத்து மதிப்பிடக்கூடிய துயரம்  இல்லை.

களத்தில் நின்ற மாவீரர்கள் ஒவ்வொரு நிமிடமும் சாவை எதிர்பார்த்து நின்றவர்கள். இரவில் சற்று நேரம் உறங்க வாய்ப்பு கிடைக்கும் நாள்களில் கூட,  முழு ராணுவ உடையையும் அணிந்துகொண்டு, கால்களில் பூட்ஸ்களைக் கூட அணிந்துகொண்டுதான் தூங்குவார்களாம். இரவில் துப்பாக்கிச் சத்தமோ, குண்டு விழும் சத்தமோ கேட்டால், அந்த நேரத்தில் உடைகளை அணிந்து கொண்டிருக்க முடியாது என்பதால்! சாவு வரலாம், வராமலும் போகலாம் என்ற நிலையில் இருப்பவர்கள் இவர்கள்.  இவர்களிலேயே இன்னொரு வகையினரும் உண்டு. சாவை நோக்கியே பயணப்படும் கரும்புலிகள் அவர்கள். எதிரிக்கு மரணம் நேருமோ இல்லையோ, தன் மரணம் உறுதி என்பதைப் புரிந்துகொண்டு களத்திற்குப் போகின்றவர்கள். இரு வகையினருமாகச் சேர்ந்து 35 ஆண்டுகள் போரில், 80000 பேர் இறந்து போயுள்ளனர்.

மக்கள் பட்ட துயரம் வகை வகையானது என்றே கூற வேண்டும். உயிர், உடைமை என்பதைத் தாண்டி பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாக நேரிடும் கொடுமையும் அவர்களுக்கு உண்டு. தன் கணவன், தான் பெற்ற  பிள்ளைகள் முன்பாகவே அத்தனை அவமானங்களுக்கும் உள்ளான தாய்மார்கள் உண்டு. பசியிலும், மருத்துவ வசதிகள் இல்லாமலும் இறந்துபோன மக்களின் எண்ணிக்கையும் மிகக் கூடுதல். அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடல் நலமில்லாதவர்களை அழைத்துச் சென்றால் அங்கு மருந்துகளே இல்லாமல், மருத்துவர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். அடுத்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர்களில் பெரும்பாலோர் இறந்துபோய் விடுவார்கள்.

வீடுகளில் மட்டுமின்றி, காடுகளில், பதுங்கு குழிகளில் பல நாள்களைக் கழித்த பல்லாயிரம் மக்கள் அங்கு உண்டு.

வெளிநாடுகளுக்கு அல்லாமல், உள் நாட்டிலேயே புலம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் உண்டு. குறிப்பாக 1995இல், யாழ்ப்பாணத்திற்குள் ராணுவம் ஊடுருவியபோது, போட்டது போட்டபடி எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கையில் கிடைத்த பொருள்களையும், பிள்ளைகளையும் மட்டும் கூட்டிக்கொண்டு ஊரை விட்டே புறப்பட்ட பயணம் அது!

அந்தக் கொடிய பயணம் குறித்து, வெரித்தாஸ் வானொலி நிலையம் தனக்கு வந்த நூற்றுக்கணக்கான கடிதங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தது. அது “உயிரைப் பிழியும் உண்மைகள்” என்னும் பெயரில் நூலாகவும் வெளிவந்துள்ளது. அவற்றுள் சில கடிதங்களில் உள்ள சில வரிகளைப் படித்தாலே அவர்களின் வலி எவ்வளவு கொடியது என்பதை நாம் உணரலாம்.

“நாங்கள் சுமந்த துன்பச் சுமையை உங்கள் தோள் அறியாது. அன்றடித்த எங்கள் இதயத் துடிப்பை காலம் கடந்து எவரும் கணக்கெடுக்க முடியாது. கல்லடித்த வேதனை காலுக்குத்தான் தெரியும்” என்கிறது ஒரு கடிதம்.  “பாலுக்கு அழுதன வாய்கள். முலை இருந்தும் முடிச்சவிழ்க்கமுடியாமல் தனக்குள் அழுதது தாய்மை” என்று களத்திலும் கவிதை பேசுகிறது ஒரு கடிதம். “கைகளில் பிடித்து இழுத்து வந்த முதியோர் சிலர் மூச்சைத் துறந்தனர். மூச்சுத் திணறிய சின்னப் பூக்கள் சில பேச்சுக்குரல் அடங்கிப் போயின. தூக்கிய போது பிள்ளையாகவும், கிடத்தியபோது பிணமாகவும்…….” என்று வரியை முடிக்க முடியாமல் துயரத்தில் மூழ்கிப் போகின்றன சில மடல்கள். இப்படி எத்தனையோ கடிதங்கள். வெளியில் கேட்காத எத்தனையோ விம்மல்கள். இறுதிப்  போரில் கூட்டம் கூட்டமாய், கொத்துக் கொத்தாய் மடிந்து போனார்கள் அந்த மக்கள்.

உயிர் பிழைத்து அயல் நாடுகளுக்கு ஓடி வந்துவிட்டாலும், அகதி வாழ்வு எத்தனை கொடுமையானது என்று அன்றாடம் அறிந்து அனுபவித்துக் கொண்டுள்ளனர் புலம் பெயர்ந்த ஈழ மக்கள். படிப்பு, தொழில்நுட்பத் தகுதிகளைக் கொண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது வேறு, அகதிகளாக அடுத்த நாட்டில் கால் வைப்பது வேறு.  அகதிகளைச் சில நாடுகள் அரவணைக்கும். சில நாடுகள் அலட்சியப்படுத்தும். சில நாடுகளோ வெளியில் விரட்டும். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, மேலை நாடுகளின் தாங்க முடியாத குளிர், பனியையும் பொறுத்துக்  கொண்டு இன்றும் ஈழ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகத்தின் வட துருவமான நார்வேயில், அந்த நாட்டு மக்களுக்கே ஒத்துக்கொள்ளாத வட எல்லையில் ஈழ மக்கள் வாழ்வதை  நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

“எத்தனை எத்தனை இளமைகள் போயின

எத்தனை எத்தனை இனிமைகள் போயின

அன்னை முகம் பாராமல், தந்தை முகம் பாராமல்

சின்ன உடல்கள் தெருவினிலே சிதறிக்  கிடந்ததுண்டு

கடலில் மடிந்தார்கள் காட்டிடையே செத்தார்கள்

படகோடு எரிந்தார்கள் பாலமுத வாயாலே

குப்பி அடித்தார்கள் குண்டனைந்து போனார்கள்”

என்று அந்த மக்களின் வலியை எடுத்துச் சொல்லுவார் கவிஞர் புதுவை ரத்தினத்துறை.

அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் தன் தந்தையை இழந்த பஞ்சாபைச்  சேர்ந்த கவுர் என்னும் பெண் கூறினாள் , “என் தந்தையைப் பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் கொன்றுவிட்டது” என்று! ஆம், போர்தான் உலகம் முழுவதும் மக்களைக் கொன்று குவித்துள்ளது. அதிலும் உள்நாட்டுப் போர் என்பது எண்ணிப்பார்க்க முடியாத துன்பங்களைக் கொண்டு வந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உலகின் போர்களுக்கு உதவாமல், மக்களின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் உதவ வேண்டும்.

போர் கொடியது. போரினால் மக்கள் அனுபவிக்கும் வலி மிக மிகக் கொடியது!

அன்புடன்
– சுபவீ –