Random image

வலி – அவர்கள் ‘சின்ன’ மனிதர்கள் இல்லை!

ஒரு கிராமத்திற்கு, ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது, என் உரை தொடங்குவதற்கு முன், சின்னச் சின்னக் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை தேர்ந்த கலைஞர்களால் நடத்தப்படவில்லை என்பதால், சிலருடைய பாடல்கள், நடனங்கள் ஆகியவை பெரிய அளவில் பாராட்டக்கூடியனவாக இல்லை. ஏதோ பரவாயில்லை என்னும் நிலைதான். ஆனால் ஒருசிலர் மிக நன்றாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவர்களில் ஒருவர் பெண். இயல்பான உயரத்தை விட மிகக் குறைவாக இருந்தார். 4 அடிக்கும் குறைவு. முதலில் சிறிய பெண் என நினைத்தேன். அருகில் அழைத்துப் பாராட்டியபோதுதான் அவருடைய வயது கூடுதலாக இருக்கும் என்பதை உணர முடிந்தது.

“நல்லா பாடுனேம்மா” என்று சொல்ல வந்தவன், வயதைப் புரிந்துகொண்டு, “நல்லா பாடுனீங்கம்மா” என்றேன். பாராட்டில்  அவர் மனம் மகிழ்ந்தாலும், சட்டென்று மாறியது. “எங்க சார், என்னதான் நல்லா பாடுனாலும், என்னைப் பாடகின்னு யாரு சொல்றா, அதோ குள்ளச்சி போறான்னுதான் சொல்றாங்க” என்றார். இந்த நிகழ்வு நடைபெற்றுச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஆனால் அந்தப் பெண்ணின் வலி நீண்ட நாள்களாக என் நெஞ்சில் தங்கிக் கிடக்கிறது.

அதன்பின், உயரம் குறைந்த ஆண் , பெண்களைப் பார்க்கும்போது, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. சென்ற ஆண்டு நானும், என் மனைவியும் அமெரிக்கா சென்றிருந்தபோது, ஓர் அரசு அலுவலகத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது மிகவும் குள்ளமான இரண்டு, மூன்று பேர் பேசிக்கொண்டே எங்களைக்  கடந்து போனார்கள். அடுத்த ஐந்து நிமிடங்களில், அதே போன்ற  இன்னொரு ஏழெட்டுப் பேரைப் பார்த்தோம். நாங்கள் அங்கு அமர்ந்திருந்த ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு வந்து போய்க்  கொண்டிருந்தனர்.  எங்களுக்கு அது மிக வியப்பாக இருந்தது. வீட்டிற்குத் திரும்பியபின், இதனை ஓர் அதிசயமாக நாங்கள் கூறினோம். அப்போதுதான் எங்கள் மருமகன் சுரேஷ் சொன்னார், “அதில் ஒன்றும் அதிசயமில்லை.அதே அலுவலகத்தின் இன்னொரு பகுதியில் அவர்களுக்கான நல அலுவலகம் இருக்கிறது”என்றார்.

ஆம், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அத்தகைய குள்ளமான மனிதர்களுக்காகத் தனி சங்கங்களும், உதவுவதற்கான அரசு அமைப்புகளும் உள்ளன என்பதைப் பிறகு படித்து அறிந்தேன். ஆஸ்திரேலியா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும் உள்ளன என்று கூறுகின்றனர்.  அமெரிக்காவில் உள்ள சங்கத்திற்கு “சிறிய மனிதர்களின் சங்கம்” (LPA – Little People Association) என்று பெயர். முன்பு அவர்களை ஆங்கிலத்தில் DWARF என்று அழைத்தனர். அதனை அவர்கள் விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்களைக் குட்டி மனிதர்கள் அல்லது சின்ன மனிதர்கள் (Little People) என்றே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

அந்தச் சின்ன மனிதர்களுக்குத்தான் வாழ்வில் எத்தனை எத்தனை வலிகள். சின்னஞ் சிறு வயதிலேயே பிறரின் கேலிக்கு அவர்கள் உள்ளாகின்றனர்.  அக்கம் பக்கத்தினரின் கேலியில் தொடங்கி, பள்ளிப் பருவத்தில் அது மேலும் வளர்ந்து, வாழ்க்கை முழுவதும்  கேலி கிண்டல்களாக நிலைபெறுகிறது. தமிழ்நாட்டில் அவர்களில் சிலரை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  ஆனால் எளிதில் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. காரணம், அவர்கள் மிக மிகச் சிலராகவே உள்ளனர். 26000 குழந்தைகளில் ஒரு குழந்தைதான் அப்படிச் சின்ன மனிதராகப் பிறக்கிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. அதனால் அவர்களைக் கண்டு பேசுவதற்குச் சில நாள்கள் ஆகிவிட்டன.

பொதுவாக அவர்களுக்கு எளிதில் பொது இடங்களில் வேலை கிடைத்து விடுவதில்லை. குறிப்பாக, மூன்று இடங்களில்தான், அவர்களைச்  சேர்த்துக் கொள்கின்றனர்.  ஒன்று, திரைப்படம், இரண்டாவது, சர்க்கஸ், மூன்றாவது ‘தீம் பார்க்’ என்று சொல்லப்படும் பொழுதுபோக்கு இடங்கள்.  மூன்று இடங்களிலுமே அவர்கள் மற்றவர்களைச் சிரிக்க வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படு கின்றனர் என்பது இன்னொரு வேதனையான உண்மை.

திரைப்படங்களில் அப்படிப்பட்ட பாத்திரங்கள் வந்தால்தான் உண்டு. பொழுதுபோக்கு இடங்களில் இரண்டு மூன்று பேருக்குத்தான் வேலை. சர்க்கஸ் என்பதோ இன்று அழிந்துகொண்டிருக்கும் கலைகளில் ஒன்று.  மேலை நாடுகளைப் போல அவர்களைப் பாதுகாக்க இங்கு அமைப்புகளும் இல்லை. எனவே அவர்கள் தங்கள் கைகளை ஊன்றியே பிழைக்க வேண்டியுள்ளது.

அண்மையில் ஒருவரை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் சந்தித்தேன். அவர் பெயர் ஜோசப். அவர் என்னை அறிந்திருந்தார். அதனால் என்னிடம் அன்பாகப் பேசினார். தன் படத்தை வெளியிடலாம் என்றும், தான் கூறும் செய்திகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கினார். அவருக்கு வயது 41. பார்த்தால் தெரியவில்லை. திருமணமாகி விட்டது என்றார். மனைவி தன்னைப் போல் இல்லை, உயரமானவர் என்றார். என்றாலும் இதுவரை குழந்தைகள் இல்லை.

குடும்ப வாழ்க்கை இயல்பாக உள்ளதா என்று கேட்டேன். ஆம் என்றார். தங்களைப்  போல் உள்ளவர்கள் பலருக்குக் குழந்தைகள் உள்ளன என்றும், உடல் சார்ந்த சிக்கல்கள் ஏதுமில்லை என்றும்  கூறினார்.உடல்நலப் பிரச்சினையை விட, சமூகப் பிரச்சினைதான் பலருக்கு மிகுதியாக உள்ளது என்றார். தானும்  சின்ன வயதில் பலருடைய கேலிக்கும் உள்ளானேன் என்றாலும், இப்போது எல்லோரும் மதிக்கின்றனர் என்று மகிழ்வுடன் கூறினார். அவர் சொன்னது உண்மைதான். நான் அவரைப் பற்றி அங்கு சென்று கேட்டபோது, “ஜோசப் அண்ணா உடை மாத்தப் போயிருக்கார், வந்திடுவார்” என்றுதான் ஒருவர் விடையளித்தார். அந்த விடை எனக்கு உண்மையிலேயே ஒரு மகிழ்வைத் தந்தது.

பிறகு அவர் மூலமாகத் தமிழ்நாட்டில் உள்ள  பலரைப் பற்றியும் அறிந்துகொண்டேன்.  அவர்களில் பலர் அவருடைய  நண்பர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு படத்தையும் கொடுத்தார். அதில் உள்ள ஒரு பெண்ணின் படம் ஏற்கனவே பார்த்தது போல் இருந்தது. அவர் யார் எனக் கேட்டேன். பேரழகன் திரைப்படத்தில் பார்த்த்திருப்பீர்கள் என்றார். ஆம், சூர்யாவும், விவேக்கும் சினேகா என்று ஒரு பெண்ணைப் பார்க்கப் போவார்கள். அவர் ஒரு குள்ளமான பெண். அந்த சினேகாதான் அவர். அதனை அறிந்துகொண்டபோது, அண்மையில், தவக்களை  என்று ஒரு நடிகர், சின்ன மனிதர் இறந்துபோனது நினைவுக்கு வந்தது.

இந்த சின்ன மனிதர்கள் குறித்து நாம் அறிந்து கொள்வதற்கு இன்னும் பல செய்திகள் உள்ளன. ஏன் இப்படி ஒரு சிலருக்கு மட்டும் உடல் வளர்ச்சி அமைகிறது என்ற வினாவிற்கு, மருத்துவ உலகத்திலும் உறுதியான விடை இல்லை. இரு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன என்று மட்டும் கூறுகின்றனர். மரபு சார்ந்ததாகப் பல நேரங்களில் இருக்கிறது என்று கூறினாலும், அதனை முழுமையாக நிறுவுவதற்கில்லை என்கின்றனர்.  இயல்பான பெற்றோர்களுக்குச் சின்ன மனிதர்களும், சின்ன மனிதர்களுக்கு இயல்பான மனிதர்களும் பிறக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள 23 குரோமோசோம் இணைகளில் 4ஆவது இணையில் ஏற்படும் சிக்கலே இதற்குக்  காரணமாக இருக்கலாம் என்று ஓர் ஆராய்ச்சி கூறுகின்றது. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை முயற்சிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன என்பது இன்னொரு செய்தி.

பாதிக்கப்பட்ட நண்பர்களைப் பொறுத்தமட்டில், உடல் சார்ந்த சிக்கலை விட, சமூகம் சார்ந்த சிக்கலே பெரிதாக உள்ளது. சின்ன வயதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதே அவர்களின் மன உளைச்சலுக்குப் பல நேரங்களில் காரணமாக உள்ளது. “பிறர் எங்களைப் பார்த்துச் சிரிக்கின்றனர். பெற்றோரோ எங்களை எண்ணி அழுகின்றனர்” என்று அவர்கள் கூறும்போது நெஞ்சு கனக்கிறது.

அவர்களுக்கான மருத்துவம் சமூகத்திடம்தான் இருக்கிறது என்பது புரிகிறது. இன்றுவரையில் நம்மில் யார் ஒருவர் அவர்களைப் பாத்துச் சிரித்திருந்தாலும், அந்தச் சிரிப்பு இன்றோடு முடிந்து போகட்டும்.அவர்களைச் சக மனிதர்களாக ஏற்கும் பண்பு வளரட்டும். அவர்களுக்காக யார் ஒருவரும் பரிவு கொள்ள வேண்டாம். பரிதாபம் காட்ட வேண்டாம். தோழமையோடு பழகினால் போதும். அவர்களின் ‘மன உயரம்’ தானே கூடிவிடும்! அவர்கள் சின்ன மனிதர்கள் இல்லை, அவர்களும் நம்மைப்போல் மனிதர்களே!

அன்புடன்
– சுபவீ –