Random image

வலி – ஒற்றைப் பெற்றோர்

எங்கள் குடும்பத்தில் ஒரு மணிவிழா! என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண் மகளைத்தான்  மணந்திருந்தார். எனவே இருவழியிலும் உறவு! அந்த விழாவில் அவர்கள் இருவரையும் பாராட்டியும், வாழ்த்தியும் பலரும் பேசினோம்.அவர்களுக்கு மாதவி, கனகா என்று  இரண்டு மகள்கள். அவர்களுள் மூத்த மகளான மாதவி பேசும்போது ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். தங்களின் பெற்றோர் தாங்கள் இருவருக்கும் கொடுத்த பெரிய பரிசு என்ன என்பது குறித்து ஒரு செய்தியைக் கூறினார்.

பொதுவாக எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வது இயல்புதான். சின்ன வயதில் பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், கொஞ்சம் வளர்ந்தபின் உடைகள், புத்தகங்கள் என்று பரிசுகள் மாறும். அவற்றில் பொதிந்திருக்கும் அன்பு ஒன்றுதான். ஆனாலும் மாதவி குறிப்பிட்ட பரிசு அனைவரையும் வியக்க வைத்தது. “எங்களுக்கு எவ்வளவோ பரிசுகளை எங்கள் பெற்றோர் கொடுத்துள்ளனர். எனினும் அவர்கள் எங்களுக்குத் தந்த பரிசுகளிலேயே மிகப் பெரியது ஒன்று உண்டு. நானும், என் தங்கையும் இருக்கும்போது அவர்கள் இருவரும் ஒருநாளும் எங்கள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. அதுதான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த விலைமதிக்க முடியாத ஒரு பரிசு” என்று சொன்னபோது அனைவரும் தங்களை மறந்து கைதட்டி மகிழ்ந்தோம்!

அத்தகைய பரிசு நம் நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பது பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை என்றே கூற வேண்டும். பெற்றோர்கள் பலர் பிள்ளைகளின் முன்னால்தான் கடுமையாகச் சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஏன் அப்படி என்று கேட்டபோது, ஒரு நண்பர் சொன்னார், “கோபம் வரும்போதுதானே சண்டை போட முடியும். அப்புறம் போடலாம் என்று ஒத்தி வைப்பதற்கு இதென்ன நாடக ஒத்திகையா?

சண்டைகள் முற்றி இருவரும் பிரிந்து விடும் காட்சிகள் இன்று நாட்டில் கூடுதலாக அரங்கேறி வருகின்றன. நீதிமன்றத்திற்குப் போனால், குடும்ப நீதிமன்றத்தில்தான் கூட்டம் மிகுதியாக உள்ளது. ,மணமுறிவு என்பது தேவையான உரிமைகளில் ஒன்றுதான்.’கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்’ என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கூறுகின்றவர்களை இன்றைய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆண், பெண் சம உரிமை என்னும் நியாயமான கோட்பாடு இன்று வளர்ந்து நிற்கிறது. இருப்பினும், தொட்டதற்கெல்லாம் மணமுறிவு என்பதும் ஏற்கத்தக்கதன்று. புரிதலும், சகிப்புத் தன்மையும் கணவன், மனைவியிடையே குறைந்து கொண்டே போகிறது என்னும் கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியுள்ளது.

கணவன்  மனைவி பிரிவு காரணமாகவோ,  இருவரில் ஒருவர் மரணம் அடைவதனாலோ ஒற்றைப் பெற்றோரிடம் (single parent) வளரும் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் வலி கொடுமையானது. மேலை நாடுகளில் ஒற்றைப் பெற்றோர் என்பது இயல்பான நிலைகளில் ஒன்றாகவே உள்ளது. ஆனால் நம் நாட்டிற்கு அது புதியது. அதனால் இங்கு பெற்றோர்களும் – குறிப்பாகப் பெண்கள் – பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளின் மனநிலையில் ஒரு ஏக்கமும், வெறுப்பும்  காணப்படுகின்றது.

இவ்வாறு துயரத்திற்குள்ளாகியிருக்கும் ஏழு பெற்றோரோடும்,  அவர்களின் குழந்தைகளோடும் உரையாடினேன். ஓரே ஒருவர்  மட்டுமே ஆண். மற்றவர்கள் பெண்கள். எனவே பிரிவுக்குப் பிறகு, பிள்ளைகள் தம் அம்மாவோடுதான் வாழ்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  குழந்தைகளிலும் இருவர் ஆண்கள், மற்றவர்கள் பெண்கள்.

கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்கள், நம் சமூகத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. முதலில் தனியாக உள்ள பெண்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை. தனியாக வாழும் பெண்கள் எல்லோரும் தவறானவர்கள் என்ற பிழையான சமூகப் பார்வை இங்கு பரவிக்கிடக்கிறது. உறவினர்களிடமும் சரியான பார்வை அமைவதில்லை. என்ன நடந்தது என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமலே, ‘இந்தப் பொண்ணு அடங்காது’ என்று எளிதில் பேசிவிடுகின்றனர்.

ஊடகத்துறையில், கல்வித்துறையில், நீதித்துறையில் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் அவர்கள் அனைவரும் தங்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. இயல்பாக, உங்கள் கணவர் எங்கே வேலை பார்க்கிறார் என்பது போன்ற வினாக்கள் நம் அமைப்பில் இயல்பானவை. அப்போது, புகழ் பெற்றவர்களாக இருந்தாலன்றி, மற்ற  பெண்கள் பலர் உண்மை கூறுவதில்லை. அல்லது, அது குறித்து விரிவாகப் பேசுவதில்லை. எனினும் மெல்ல மெல்ல உண்மை தெரிய வந்து விடுகின்றது. உண்மை தெரிந்தபின், நாகரிகமாகத் தோற்றமளிக்கும் ஆண்களே கூட தங்களுக்குள் ஒளிந்திருக்கும் அநாகரிக முகத்தைக் காட்டத்  தொடங்கி விடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, சற்றுக் கடுமையாகவே நடந்து கொள்ள வேண்டியுள்ளது.யாரிடமும் சிரித்துப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிடுசிடுப்பே அவர்களின் பாதுகாப்பு வளையமாக உள்ளது.

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் , ஒற்றைப் பெற்றோராக உள்ள பெண்களுக்கு எதிரியாகத்தான் உள்ளது. கட்செவி ஊடகங்களின் வழி, தரக்குறைவான செய்திகள், படங்கள் வந்து சேர்கின்றன. அனைத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. வேலை வேண்டாம் என்று தூக்கி எறிந்து  விட முடியாது. பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது.

ஒற்றைப் பெற்றோரிடம் வளரும் பிள்ளைகளின் வலி அதனினும்  துன்பம் நிறைந்ததாகவே உள்ளது. நீதிமன்ற ஆணைப்படி பிரிந்தவர்களின் குழந்தைகள், வார இறுதி விடுமுறை நாள்களில் தங்களின் இன்னொரு பெற்றோரைப் பார்க்கச்  செல்கின்றனர். ‘நான் அப்பா செல்லம்தான். இருந்தாலும், அப்பாவைப் பார்க்க சனி, ஞாயிறுகளில் போகும்போது, அப்பாவின் உறவினர்கள் என் அம்மாவைத் தவறாகப் பேசும்போது எனக்கு கோபம் வரும். இனி இங்கு வரக்கூடாது என்று நினைப்பேன்” என்று ஒரு பெண் குழந்தை சொல்கிறது.

தன் தோழிகள் எல்லாம் அப்பா, அம்மாவோடு இருக்கும்போது தனக்கு மட்டும் அந்த மகிழ்ச்சி வாய்க்க வில்லையே என்ற ஏக்கம் பிள்ளைகளிடம் வெகுவாக  உள்ளது. இருப்பினும், ஒற்றை ஆளாக இருந்து தன்னை வளர்க்கும் அம்மாவின் மீது இந்தப் பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரு பெரிய மதிப்பும், பாசமும் உள்ளது.

‘பள்ளிக்கூடம், கல்லூரி எங்கு சென்றாலும், அப்பாவைப் பற்றித்தான் முதல் கேள்வி, எங்களை சங்கடப்படுத்தும் கேள்வி முன்னே வந்து நிற்கிறது’  என்று கூறும் ஒரு பெண், எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் சொல்லிக்கொண்டே இருக்க முடியுமா என்று கேட்கிறார். பல நேரங்களில் அந்தப் பேச்சைத் தவிர்த்து விடுவோம், அல்லது வெளி நாட்டில் இருக்கிறார் என்பது போலச் சொல்லி விடுவோம் என்கிறார்கள். நெருக்கமானவர்கள் கேட்கும்போது, “அப்பா எங்க கூட இல்லை” என்று சொல்லி ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என்கின்றனர்.

பெரும்பாலான பிள்ளைகளிடம் ஓர் ஏக்கம் இருக்கவே செய்கிறது. இப்போதும் இருக்கிறது என்று ஒரு பெண்ணும், வேறு வழியில்லை, கடந்து வந்து விட்டேன் என்று இன்னொரு பெண்ணும் கூறினர்.

ஒரு பெண் குழந்தையிடம் மட்டும் ஏக்கத்திற்குப் பதிலாக, ஒரு விதமான கோபத்தையும், வெறுப்பையும் பார்க்க முடிந்தது. கல்லூரியில் படிக்கும் நிலையில் பெற்றோரிடம் பிரிவு ஏற்பட்டதால், அந்தப் பெண்ணுக்கு எல்லா விவரமும் தெரிந்துள்ளது. அம்மாவை அவர் ஏமாற்றி விட்டார் என்னும் கோபம் இருக்கிறது. தன் முன்னெழுத்தில் (initial) அப்பா பெயரும் சேர்ந்துள்ளது, இனி அது வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று கூறும் அளவு வெறுப்பு உள்ளது. தன் தோழிகள் சிலர் அது பற்றிப் பேசுவதால், சமூக வலைத்  தளங்களை விட்டே வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறார்.

குழந்தைகளின் துன்பங்களைக் கிளறி அவர்களிடம் கேள்வி கேட்டபோது வருத்தமாகத்தான் இருந்தது. மற்ற குழந்தைகளுக்கும் அந்நிலை வரவேண்டாம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த முயற்சி என்று எண்ணியே ஆறுதல் கொள்ள வேண்டியிருந்தது.

அன்பு நண்பர்களே, உங்கள் குழந்தைகளின் வலியை உணர்ந்தேனும், உங்கள் சண்டைகளைத் தள்ளி வையுங்கள் என்று பிரிய நினைக்கும் இணையர்களை வேண்டிக்கொள்வோம்!

அன்புடன்
– சுபவீ –

You may have missed