சென்னை:

பேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில், பேனர் வைத்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதி மன்றம்  நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. அதன்படி தினசரி காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம்  12 ஆம் தேதி அன்று குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்னும் 23 வயதுப் பெண் பள்ளிக்கரணை அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது,  அந்த சாலையில் நடுவில், அதிமுக பிரமுகர் வீட்டுத் திருணத்தை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனர், காற்று காரணமாக அறுந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.  இதன் காரணமாக தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் அவர் மரணம் அடைந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன்  சரண் அடைந்தனர். அதையடுத்து அவர்களை  கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து,  ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர்களின் ஜாமின் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. தற்போது, அவர்கள் மீண்டும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதில், தாங்கள், 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும், எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என, நீதிபதிகள் அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயகோபாலுக்கும், மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன்,  இருவரும் தலா தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த பணம்  ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் வழங்க வேண்டும் என்று ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத் தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஆலந்தூர் நீதிமன்றம் சம்மன் பெற்று ஆஜரான பின், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.