தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் விவரங்களை அளியுங்கள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக நடைபெற்ற வன்முறை, துப்பாக்கி சூடு தொடர்பாகக் காவல்துறையினர் 100க்கும் மேற்பட்ட  வழக்குகள்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செல்வம், பசீர் அகமது ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மே 22 அன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள  அனைத்துக் குற்றச்சம்பவங்களைக் குறிப்பிட்டுக் குற்ற எண் 191 இன் கீழ் வழக்குப் பதிந்துள்ள நிலையில் அதே சம்பவங்களுக்கு 172வழக்குகள் பதிந்தது எப்படி என மனுதாரரின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்த நடைபெற்ற விசாரணையை அடுத்து, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதையடுதது வழக்கு விசாரணையைத் திங்கட்கிழமைக்குத் தள்ளி வைத்தனர்.