பாகிஸ்தானுடன் போர் தொடுத்து கிழி கிழி என கிழிக்க வேண்டும் : சுப்பிரமணியன் சாமி
டில்லி
குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினரை கேவலப் படுத்திய பாகிஸ்தானுடன் போர் தொடுக்க வேண்டும் என சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார்.
பாஜகவின் ராஜ்யசபை உறுப்பினரான சுப்ரமணியன் சாமி பல சர்ச்சைக்குறிய கருத்துக்களை தைரியமாக கூறி வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தான் அரசால் மரணதண்டனை வழங்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவர் மனைவி மற்றும் தாயார் சென்ற போது அவர் தாலியை கழற்றச் சொன்னதாகவும் காலணி மற்றும் உடைகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், குங்குமத்தை அழிக்கச் சொன்னதாகவும் தகவல்கள் வந்தன. தற்போது அது குறித்து சுப்ரமணியன் சாமி கருத்து கூறி உள்ளார்.
அவர் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “குல்பூஷன் ஜாதவ் மனைவிக்கு நடந்த கொடுமை மகாபாரதத்தில் திரௌபதிக்கு நடந்த துகிலுரிப்பை விடக் கொடுமையனது. அதற்கு பீமன் பழி தீர்த்தது போல நாமும் பாகிஸ்தான் மீது படை எடுத்து அவர்களை கிழி கிழி என கிழிக்க வேண்டும். அந்த நாடு நான்கு துண்டாக்கப்பட வேண்டும். நான் உடனடியாக போர் தொடுக்க வேண்டும் என சொல்லவில்லை. ஆனால் அதற்கான ஆயத்தங்களை துவங்க வேண்டும். இது எனது சொந்தக் கருத்து தான். ஆனால் இதுவே விரைவில் பாஜகவின் கருத்து ஆனாலும் ஆச்சரியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.