டில்லி

பாஜ கட்சியின் ஒழுங்கைக் காப்பாற்ற ஆடம்பர உடைகளை தவிர்க்க வேண்டும் மதுவை தடை செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சாமி கூறி உள்ளார்.

பாஜகவின் ராஜ்யசபை உறுப்பினரான சுப்பிரமணியன் சாமி பல கருத்துக்களை வெளிப்படையாக கூறும் வழக்கம் உடையவர்.  பாஜகவினர் மேல்நாட்டு உடைகள் அணிவதை அவர் அடிக்கடி விமர்சித்துள்ளார்.  ஏற்கனவே ஒரு முறை ”பாஜக தனது அமைச்சர்களை வெளிநாடு செல்லும் போது நமது பாரம்பரிய உடைகளையோ அல்லது இந்தியாவின் நவ நாகரிக உடைகளையோ அணிந்துக் கொள்ள சொல்ல வேண்டும்.  கோட் அணிந்து அவர்கள் வந்தால் ஓட்டல் சர்வர்கள் போல உள்ளனர்” என தெரிவித்திருந்தார்.  அது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.

தற்போது அவர் பாஜக வின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிந்துள்ளார்.

அதில், ”மேற்கத்திய உடைகள் என்பது நமது அடிமைத்தனத்தை பிரதிபலிக்கிறது.   பாஜக தனது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக நமது பாரம்பரிய உடைகளை அணிந்துக் கொள்ள தங்கள் அமைச்சர்களை வற்புறுத்த வேண்டும்” எனக் கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில், “விதி எண் 49ன் படி மதுவகைகள் தடை செய்யப்பட வேண்டும்.  நான் சட்டப்படி அதைக் கோரவில்லை.  பாஜக அதை தனது கட்சியின் ஒழுங்கு விதிகளில் ஒன்றாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.