டில்லி

யோத்தியில் உள்ள நிலத்தை ராமர் கோவில் கட்ட ஒதுக்குமாறு மோடிக்கு சுப்ரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாப்ரி மசூதி எழுப்பப்பட்டுள்ளதாக பல்லாண்டுகளாக சர்ச்சை இருந்தது.   கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி கரசேவகர்களால் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது.   அதை ஒட்டி நாடெங்கும்  கலவரங்கள் எழுந்தன.

இந்த கோவில் அமைக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.   இந்த வழக்கில் ஜனவரி மாதம் மோடி அரசு அளித்த விண்ணப்பத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள 67 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளரான ராம்ஜன்மபூமி நியாஸ் அமைப்பிடம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி இது குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் சுப்ரமணியன் சாமி, “கடந்த 1993 ஆம் வருடம் இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.   அப்போதைய பிரதமரான நரசிம்ம ராவ் இது குறித்து முடிவுகள் எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதனால் இந்த நிலம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் பாஜக அரசு ராமர் கோவில் கட்ட இந்த நிலத்தை ஒதுக்கலாம்.   இது நீதிமன்ற உத்தரவை மீறியதாகாது.   எனவே இதற்கு மத்திய அரசு நீதிமன்றத்தின் அனுமதியை கேட்க தேவை இருக்காது.   ஆகையால் உடனடியாக கோவில் கட்ட 67 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும்.

அது மட்டுமின்றி ராமர் பாலம் குறித்தும் வெகு நாட்களாக சர்ச்சை உள்ளது.  ஆகவே அதை அரசு தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.