அழகிரி திமுக தலைவர் பதவிக்கு சரிப்பட்டு வர மாட்டார் : சுப்ரமணியன் சாமி

சென்னை

அழகிரி திமுக தலைவர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார்.

பாஜகவின் தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி அடிக்கடி தனது கருத்துக்களால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது தொடர்ந்து வருகிறது.   இந்நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “திமுக வின் அடுத்த தலைவர் மு க ஸ்டாலின் தான்.  அது எப்போதோ முடிவான ஒன்று.   அத்துடன் வரும் 28 ஆம் தேதி ஸ்டாலின் திமுக தலைவராக பதவி ஏற்கப் போகிறார்.   மு க அழகிரி திமுக தலைவர் பதவிக்கு சரிப்பட்டு வர மாட்டார்.   அவரால் இட்லிக்கடையை திறக்க மட்டுமே முடியும்.

தமிழகத்தில் பாஜக இந்நாள் வரை நடிகர்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறது.   அதை முதலில் நிறுத்தி விட்டு கட்சியின் கொள்கைகளை முன்னிறுத்தினால் மட்டுமே கட்சி வெற்றி அடையும்.  அதை விடுத்து பாஜக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பின்னால் போகக் கூடாது” என தெரிவித்தார்.