லட்சுமி விலாஸ் வங்கி – டி பி எஸ் வங்கி இணைப்பு : சுப்ரமணியன் சுவாமி பிரதமருக்குக் கடிதம்

டில்லி

ட்சுமி விலாஸ் வங்கி மற்றும் டி பி எஸ் வங்கி இணைப்பு குறித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

பிரபல வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி தமிழகத்தைச் சேர்ந்த பழம்பெரும் வங்கி ஆகும்.   வாராக்கடன்கள் அதிகரிப்பால் தற்போது இந்த வங்கி கடும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.    மத்திய நிதி அமைச்சகம் இந்த வங்கியின் செயல்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.   இந்த வங்கியின் பொறுப்பை பங்குதாரர்களில் ஒருவரான டி பி எஸ் வங்கி ஏற்றுக் கொள்ள உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் பிரபல பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் சுவாமி, லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி இணைப்பு குறித்து நான் ஒரு சில விவரங்களை உங்கள் கவனத்துக்கு எடுத்து வர விரும்புகிறேன்.

இந்த வங்கிகள் இணைப்பு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு என நான் நம்புகிறேன்.  டிபிஎஸ் வங்கியைப் போல் 20 மடங்கு அதிக வங்கி செயல்பாடுகளை லட்சுமி விலாஸ் வங்கி (எல் வி பி)  செய்து வருகிறது.  இந்தியா முழுவதும் இந்த வங்கிக்கு 550 கிளைகள் உள்ளன.   தமிழகத்தில் கரூரை மையமாகக் கொண்ட 100 வருடப் பழமையான இந்த வங்கி அதிக அளவில் ஏழை, மற்றும் வங்கி சாரா மக்களுக்குச் சேவை செய்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிசர்வ் வங்கி இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைத்து வங்கியின் அனைத்து சொத்துக்களையும் டிபிஎஸ் வங்கிக்கு மாற்ற உள்ளதாகத் தெரிவித்தது.   இவ்வாறு மாற்றப்படும் போது டிபிஎஸ் வங்கியின் முதலீடு மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.  ஆனால் எல் வி பி அளித்துள்ள அனைத்து பங்குகள் மற்றும் பாண்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இது ஒரு ஊழல் போலத் தெரிகிறது.

எல் வி பி யின் பங்குதாரர்களிடம் எவ்வித எதிர்ப்பும் கேளாமல் இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.  வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட 72 மணி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதிசயமாக உள்ளது.  ரிசர்வ் வங்கி எவ்வித நடைமுறை நடவடிக்கைகளையும் பங்குதாரர்களின் எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாமல் இந்த வங்கிகள் இணைப்பை அமைக்க முடிவு எடுத்துள்ளது.

எல்விபியின் பங்குதாரர்களின் கருத்தை கேளாமல் ரிசர்வ் வங்கி இந்த இணைப்பு முடிவை எடுத்தது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குக்குச் சமமானதாகும்,  2 ஜி ஸ்பெக்டிரம் ஊழலில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் அப்போதைய ஆளும் கட்சி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் அதன் கூட்டணிக் கட்சி ஆட்சியை இழந்ததை கவனம் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி வங்கிகளை எவ்வித தடையுமின்றி கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கிக்கு அதிக பொறுப்புள்ளது என்பது முக்கியமானது.  தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் மீது அவர் தமிழகத்தில் பணி புரிந்த போது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு வங்கிகளைக் கட்டுப்படுத்துவதில் ஒரு பொறுப்புள்ளது மட்டுமின்றி அனைத்து வங்கிகளின் நிர்வாகத்திலும் ஒரு உறுப்பினராகப் பங்கேற்றுள்ளது.   இந்த பங்களிப்பு வங்கிகளின் நஷ்டம் மற்றும் வாராக்கடன்கள் அதிகரிப்புக்குப் பிறகு எல்விபி உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் உள்ளது.

இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் உறுப்பினர் அனைத்து தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் நிர்வாகத்தில் ஒருவராக உள்ளார் என்பது தெளிவாகி உள்ளது.  அவருக்கு வங்கிகளின் கடன்களைக் கட்டுப்படுத்துவதில் முழு பொறுப்பு உள்ளது. எனவே இந்த விவரங்களின் மூலம் எல்விபி தவறாக இயங்கியதில் ரிசர்வ் வங்கிக்கும் பொறுப்புள்ளது தெளிவாகி உள்ளது.

எனவே இந்த அரசை நான்

  • எல்விபியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பது குறித்து ஒரு தணிக்கையை நடத்த வேண்டும்
  • டிபிஎஸ் வங்கி இந்தியாவிலும் அதன் தாயகமான சிங்கப்பூரிலும் நிகழ்த்தி உள்ள பண மோசடி குற்றங்கள் குறித்த அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.
  • ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.  இதுவரை இது குறித்து சிபிஐ விசாரணை எதுவும் நடக்கவில்லை என்பதால் இப்போது முழு விசாரணை நடக்க வேண்டும்.
  • அரசின் முக்கிய கடமைகளில் ரிசர்வ் வங்கியின் நேர்மையான செயல்பாடு முக்கியமாகும்  எனவே தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநரை இந்த விசாரணை முடியும் வரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.  ரிசர்வ் வங்கி ஆணையம் மற்றும் ஆலோசகர் குழு மாற்றி அமைக்க வேண்டும்

என கேட்டுக் கொள்கிறேன்.

அரசின் நிதி அமைப்பின் எல்விபி –டிபிஎஸ் இணைப்பின் பின்பு பெரிய ஊழல் உள்ளதாகத் தெரிகிறது”

எனத் தெரிவித்துள்ளார்.