மும்பை:

நாட்டில் உள்ள அனைத்து பசு பாதுகாப்பு முகாம்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பெட்ரோலுக்கு ரூ.1 செஸ் வரி விதிக்க வேண்டும் என பாஜ மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.

மும்பை பங்கு சந்தை சார்பில் பசு பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது. விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நடந்த இந்த விழாவில் பசு பாதுகாவலர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இங்கு மாட்டு கோமியம், மாட்டு சானம் மூலம் சோப்பு, ஏர் பிரஷ்னர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அகிர் இதில் கலந்துகொண்டு பேசினார்.

விராத் ஹிந்துஸ்தான் சங்க நிறுவனரும், பாஜ மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி இதில் பேசுகையில், ‘‘ மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம் அவற்றுக்கு அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளது. மாட்டு இறைச்சி, மாடுகள் ஏற்றுமதிக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டிருந்த மானியங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

மேற்கத்திய நாடுகளில் மாட்டு இறைச்சியில் போதுமான சத்துக்கள் எதுவும் இல்லை என்பதை ஒப்பு கொண்டுள்ளன. தானியங்களிலும், சோயா பீன்ஸ் போன்றவற்றில் தான் அதிக சத்துக்கள் உள்ளன’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘மாடு அறிய வகை உயிரினமாகும். அதனால் அதை பாதுகாக்க வேண்டும். மாட்டு சானமும், கோமியமும் மருத்துவ குணங்கள் கொண்டதாகும். ஐரோப்பா நாடுகளோடு ஒப்பிடுகையில் ஒரு லிட்டர் பால் இந்தியாவில் 6 மடங்கு விலை குறைவு.

நம் நாட்டில் மாடுகளை பாதுகாத்து, பராமரித்தால் பெரிய பால் ஏற்றுமதி நாடாக இந்தியா திகழும். இந்த ஏற்றுமதி நிதியாதாரங்கள் கோ சாலைகளை பராமரிக்க உதவலாம். நாட்டில் உள்ள அனைத்து பசு பாதுகாப்பு முகாம்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பெட்ரோலுக்கு ரூ.1 செஸ் வரி விதிக்க வேண்டும்’’ என்றார்.

ராதாநாத் சுவாமி மகராஜ் பேசுகையில், ‘‘ பசுக்கள் தான் உலக பொருளாதாரத்தின் அஸ்திவாரம். வெறும் மாட்டு இறைச்சி கூடங்களில் இருந்து மட்டும் அவற்றை மீட்பது மட்டும் நோக்கமல்ல. அவை பிறப்பு முதல் இறப்பு வரை மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.