பொருளாதாரம் தெரியாத நிதி அமைச்சர் நிர்மலா : சுப்ரமணியன் சாமி விமர்சனம்

திருநெல்வேலி

பொருளாதாரம் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத்  தெரியாது ஏன பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் ஆவார். அவருடைய பல கருத்துக்கள் பாஜகவினரிடையே கடும்  சர்ச்சையையும் தலைமைக்குச் சங்கடத்தையும் அளித்துள்ளன. ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர் நகரில் சுப்ரமணியன்  சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் சுப்ரமணியன் சாமி, “இந்தியா தனது பொருளாதார கொள்கைகளில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வரத் தவறினால் விலை வாசி ஏற்றத்தைத் தடுக்க முடியாத நிலை உண்டாகும்.

இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும். ஆனால் இது குறித்து மத்திய பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக அரசில் ஏற்கனவே நிதி  அமைச்சர்களாக இருந்தவர்களுக்குப் பொருளாதாரம் தெரியாது. தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் தெரியாது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது மேலும் 7 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் ப சிதம்பரம் மட்டுமின்றி அவர் குடும்பமே சிறை  செல்வது உறுதி. அத்துடன் 2 ஜி முறைகேடு வழக்கில் திமுக மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் ஆ ராசா ஆகியோரும் விரைவில் சிறை செல்வார்கள்” எனத்தெரிவித்துள்ளார்.