சமையல் எரிவாயு விலை உயர்வு : பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

டில்லி

மானிய மற்றும் மானியமல்லாத சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது.

மத்திய அரசு சமையல் எரிவாயுவுக்கு மானியம் அளித்து வருகிறது.   முந்தைய ஆட்சியின் போது அனைவருக்கும் மானியம் இருந்ததால் ஒரே விலையாக இருந்தது.   அதன்  பிறகு பாஜக அரசு மானியம் தேவைப்படாதோர் அதிலிருந்து விலகலாம் என அறிவித்தது.  அதை ஒட்டி சிலர் மானியம் தேவை இல்லை என எழுதிக் கொடுத்தனர்.

அதன் பின்னர் அனைவருக்கும் மானியம் இல்லாத விலையில் வழங்கப்பட்டு பிறகு அரசின் மானியம் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.   கடந்த மாதம் வங்கியில் மானியமாக செலுத்தப்பட்ட தொகை ரூ.320.49 ஆகவும் இந்த மாதம் அது ரூ.376.60 ஆகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு அதிகரித்துள்ளதற்கான முக்கிய காரணம் எரிவாயு விலை உயர்வே என மக்கள் தெரிவிக்கின்றனர்.   இந்நிலையில் எரிவாயு சிலிண்டர்கள் விலைய அரசு தற்போது மேலும் உயர்த்தி உள்ளது.  மானியம் உள்ள எரிவாயு சிலிண்டருக்கு ரூ.2.89 உம் மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ. 59 ம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வ்ரும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.