சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், தமிழக சட்டசபையில்  இன்று ஒரே நாளில் மட்டும், காவல் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை உள்பட  27 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 9ந்தேதி தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் 9ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 30ந்தேதியுடன் நிறைவு பெறும் என கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, சட்டமன்றத்தை உடனே ஒத்திவைக்க திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையும் என சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று  சட்டசபையில் அரசுத்துறைகளைச் சேர்ந்த  27 மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு அந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து,   இன்று காவல் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை, ஓய்வூதியங்கள், தொழில் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, இந்து அறநிலையத்துறை உள்பட 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு இன்றே நிறைவேற்றப்பட்டன. அந்தந்த துறைகளுக்கான நிதிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 31ந்தேதி, இதே போல ஒரே நாளில் 11 மானியக் கோரிக்கைகளுக்கு நிதிகளை ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.