சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் COVID-19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை  மிகவும் குறைந்துள்ளது. அதுவும் எவ்வித கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் இல்லாமலேயே. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டும் வரைபடத்தின் வளர்ச்சி தட்டையாக்கப்பட்டுள்ளது

 

(ஒரு லாக்ரதம் அளவுகோல் என்பது மாற்ற விகிதத்தை பரந்த அளவிலான அளவீடுகளில் காட்ட உதவுகிறது)

 இந்த வார நிலவரப்படி, தென்கொரியாவில் 9,000-க்கும் சற்றே அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பதிவாகியுள்ளன. இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையின்படி முதல் 10 நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், தென்கொரியாவுக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்துள்ளது. அதன்படி, இந்த நாடு புதிய நோயாளிகளின் எண்ணிக்கையின் உயர்வை கணிசமாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்பதே ஆகும். அதுவும், உலகின் வேறு எந்த நாடும் செய்யாத கடுமையான ஊரடங்கு முறைகள் இல்லாமல் தென்கொரியா இதை சாதித்துள்ளதாக உலகின் வல்லுனர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.

“கொரோனாவைக் கட்டுப்படுத்த, ஒரு அரசாங்கம் அனைத்தையும் முடக்க வேண்டிய அவசியமில்லை” என்பதற்கு சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளை உதாரணங்களாக நாங்கள் காண்கிறோம்” என்று உலக சுகாதார அமைப்பின், அவசரகால சுகாதார திட்டங்களின் தலைவர் மைக் ரையன் கூறினார். “அவர்களால் பள்ளிகள், வழக்கமான நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிட்ட புத்திசாலித்தனமான யுக்திகளை கையாள முடிந்துள்ளது. இதனால், எவ்வித கடுமையான நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் இதை சாதிக்க முடிந்ததுள்ளது” என்றும் கூறினார்.

மேலும், ஊடகவியலாளர்களிடம் பேசிய ரியான், “இந்த நாடுகள் மிகப் பெரிய அளவிலான ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களில்  சந்தேகத்திற்கிடமானவர்கள் என வகைப்படுத்தி கையாண்டதால் வைரஸ் பரவலை எளிதாக கண்டறிந்து கட்டுக்குள் வைக்க முடிந்துள்ளது” என்று தெளிவுப்படுத்தினார். வைரசின் தீவிரப் பரவல் மற்றும் நெருக்கடி நிலையை தென்கொரியா கையாண்ட முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார். மேலும், அமெரிக்காவில் தற்போதுள்ள நிலையை சமாளிக்க தகுந்த மருத்துவ உபகரணங்களைக் கொடுத்து உதவுமாறு தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்- ஐக் கேட்டுக் கொண்டார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தென்கொரியா கற்றுத் தந்த யுக்திகளை உலகின் ஒவ்வொரு நாடும், பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தென்கொரியாவின் வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா கடந்த வாரம் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தென்கொரியாவின் இந்த வெற்றியைப் பற்றிக் கேட்டபோது, அவர் கூறியதாவது, “கொரியா மற்ற நாடுகளுக்கு கூறுவது என்னவெனில், தென்கொரியாவில் வைரஸ் தொற்று கணிசமாக வருவதற்கு முன்பே அதற்கான பரிசோதனை முறைகளை நாங்கள் உருவாக்கியிருந்தோம்” என்பதே ஆகும். மேலும், “ஜனவரி மாத நடுப்பகுதியில், எங்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள் இங்குள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஒரு விரைவான சோதனை முறையை உருவாக்க விளைந்தனர்” என்று கூறினார். “பின்னர் அவர்கள் கண்டறிந்த முறைகளை மருந்து நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு, அதை பெரும் அளவில் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் மற்றும் சோதனைக்குத் தேவையான உபகரணங்களைத் அளித்து தயாரித்தனர்.” என்று உறுதிப்படுத்தினார். ஆகவே, பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில், டேகுவில் ஒரு மதப்பிரிவின் உறுப்பினர்கள் நோய்வாய்ப்படத் தொடங்கியபோது, தென்கொரியா இது COVID-19 தொற்று நோய் என்பதை விரைவாக உறுதிப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது” என்று கூறினார்.

கொரோனாவின் தீவிர பரவலுக்கு “விரைவான பரிசோதனையே பதில்” என்று காங் கூறினார், “ஏனெனில் இது தொற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. அதனால் மேலும் பரவுவதைக் தடுக்க முடிகிறது”. அதுமட்டுமின்றி, வைரஸ் தொற்று கொண்டவர்களை விரைவாக தனிமைப்படுத்தவும், சிகிச்சையளிக்கவும் சுகாதார அதிகாரிகளுக்கு உதவி செய்கிறது. இந்த கொரோனாவின் தீவிர பரவலைக் கட்டுப்படுத்த ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் இதேபோன்ற வழிகளையே பின்பற்றியுள்ளன. தொற்று நோயை அடையாளம் காண துரித பரிசோதனை முறைகளை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தினர். அதனுடன்,  நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தது மட்டுமின்றி, லேசான அறிகுறிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை சோதித்து, உறுதிப்படுத்தப்பட்டவர்களை கட்டாய மற்றும் தீவிரமாக தனிமைப்படுத்தியுள்ளனர்.

வீட்டிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்ட பெரும்பான்மையான மக்கள் ஏற்கனவே ஆரோக்கியமானவர்கள். அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் இல்லை. ஆனால், அறிகுறிகளை கொண்ட சிலர், மேலும் தீவிர தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படலாம். WHO இன் டெட்ரோஸ் இதை “முளையிலேயே கொல்லுதல்” என்று வர்ணிக்கிறார். அடிப்படையில், இது வைரஸ் மேலும் பரவுவதைத் தடுத்தல் மற்றும்  சமூகப் பரவலைத் தடுத்தல் செயல்பாடு ஆகும்.

தீவிரப் பரவல் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஹாங்காங்கும் நம்பவியலாத வேகத்துடன் செயலில் இறங்கியது. டிசம்பர் 31, 2019 அன்று, நகரத்தின் சுகாதாரத் துறையான ஹாங்காங்கின் சுகாதார பாதுகாப்பு மையம், அதன் மருத்துவர்களுக்கு காய்ச்சல், கடுமையான சுவாச நோய், நிமோனியா மற்றும் / அல்லது மூச்சுத் திணறல் போன்ற நோயாளிகளைத் தேடுமாறு ஒரு எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியது. குறிப்பாக சமீபத்தில் சீனாவின் வூஹானுக்கு சென்று வந்த, இந்த அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளை தேடிப்பிடிக்க பணிக்கப்பட்டனர். இந்த வுஹான் நகரமே தொற்றுநோயின் ஆரம்ப மையமாகும். இந்த நெருக்கடிக்கு முன்புவரை, ஹாங்காங் நகரத்திலிருந்து வுஹானுக்கு நேரடியாகச் சென்ற அதிவேக இரயில் பாதை ஜனவரி 30 அன்று மூடப்பட்டது, பின்னர் இன்றுவரை இயக்கப்படவில்லை.

தென்கொரியா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் காணப்படும் பொதுவான அம்சம் என்னவெனில், இந்த தீவிரப் பரவல் நெருக்கடியிலும் அவர்களால் பெரும்பாலான தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து வைக்க முடிந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் வகுப்பறைகளை மூடிவைத்திருக்கும் நேரத்தில் சிங்கப்பூர் தனது பள்ளிகளை திறந்து வைத்திருக்கிறது.

இதேப்போல குறிப்பிடத்தக்க முறையில் செயல்பட்ட மற்றொரு ஆசிய நாடு ஜப்பான். ஜப்பான் தென்கொரியாவைப் போல இரு மடங்கிற்கும் அதிகமான மக்கள்தொகையையும், சீனாவுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தாலும்,  இந்த கட்டுரை எழுதப்படும் வரை (ஏப்ரல் 23, மாலை நிலவரப்படி) 11,000-க்கும் அதிகமான உறுதி செய்யப்பட்ட நோயாளிகளே பதிவாகியுள்ளனர்.  ஜப்பான் தென்கொரியாவைப் போல பரவலான பரிசோதனைகளை செய்யவில்லை எனினும், எந்தவொரு பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரின் தொடர்புகள் என அனைத்தையும் சரியாக விசாரித்து கண்காணித்ததின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் சமூக பரவலைத் தடுத்ததாகத் அறியப்பட்டுள்ளது.

வைரஸ் தீவிரப் பரவல் நெருக்கடியை கையாண்ட வழிமுறைகளில் ஆசிய நாடுகள் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருந்தாலும்,  சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பல இடங்களில் அதிகரித்துள்ளன. இந்த வாரம், சிங்கப்பூர் சமீபத்தில் வேறு நாடுகளுக்கு சென்று திரும்பிய மக்களிடையே தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறுகிய கால பயணிகள் நுழைவதை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. “முடிந்தவரை சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்யவே, கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான காரணம், ” என்று சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஓங் யே குங் தன் பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார். மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு விதிகளை கொண்டிருப்பதின் மூலம் மக்கள் தங்களின் “இதனால் தினசரி நடவடிக்கைகள், அதாவது, வேலைக்குச் செல்வது, வெளியே சாப்பிடுவது, பள்ளிக்குச் செல்வது போன்றவைகளை வழக்கமாக தொடரலாம்” என்றார். மேலும், குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாகவும், அதிக உற்பத்தி திறன் கொண்டவர்கலாகவும் இருக்க முடியும் என்றும், பள்ளிகளை மூடுவது சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பணிபுரியும் பெற்றோர்களுக்கு குறிப்பிடத்தக்க சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் வாதிட்டார்.

“COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் எங்கள் சுகாதார அமைப்பை வலுவாக வைத்திருப்பது மிக முக்கியமானது” என்று அவர் கூறினார். “எங்கள் முன்னணி வீரர்கள், அவர்களின் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலில், அர்த்தமுள்ள செயல்களில்  ஈடுபட்டிருப்பதற்கு உறுதியளிக்கப்படுவார்கள்.” மேலும் பள்ளிகள் வைரஸ் பரவுதலில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற வாதத்தையும் மறுத்துள்ளார். அது மட்டுமின்றி, குழந்தைகள் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாவார்கள், மற்றும் வைரஸ் பரப்புவதில் முக்கிய இடம் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை எனவும், பொதுவாக குழந்தைகள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலமே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெளிவுப்படுத்தினார். (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் போன்ற சுகாதார நிறுவனங்கள், பெரியவர்களை விட குழந்தைகள் அடிக்கடி லேசான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறினாலும், “நோய் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி மேலும் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றும் வலியுறுத்துகிறது.

ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவை இணைக்கும் மற்றொரு அம்சம் என்னவெனில், மூன்று நாடுகளுமே, கடந்த காலங்களில் மோசமான கொரோனா வைரஸ் தீவிரப் பரவலைச் சந்தித்துள்ளன. 2003 ஆம் ஆண்டில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் SARS ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் 2015 ஆம் ஆண்டில் MERS பரவலால் தென்கொரியா நிலைக்குலைந்தது. கொரோனா வைரஸ்களுடனான அவர்களின் கடந்த கால அனுபவங்கள், COVID-19 க்கு எதிரான நடவடிக்கைகளில், அவர்களின் அதிகாரிகளை மிகவும் தீவிரமாக செயல்பட வைத்திருக்கலாம். மேலும், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மக்களிடையே ஊடுருவும் நடவடிக்கைகளை குடிமக்களையும் மனப்பூர்வமாக ஏற்க வைத்திருக்கலாம்.

மேலும், சந்தேகத்திற்கிடமான நோயாளிகளின் சமூகத் தொடர்புகளை வரைபடமாக்கி, கண்காணிப்பு கேமராக்கள், செல்போன்கள் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவை தென்கொரியா பயன்படுத்தியுள்ளது. புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நோயாளியைப் பற்றியும் தினசரி மாலையும் விரிவான தகவல்களை ஹாங்காங் வெளியிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வழங்கவில்லை என்றாலும், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட அல்லது பாதிப்பு இருக்கலாம் என சந்தேகப்படும் நபரின் வயது, பாலினம், தெரு முகவரி, மருத்துவ அறிகுறிகள் – மற்றும் பெரும்பாலும் அந்த நபர் பணிபுரியும் இடத்தின் சரியான தகவலை வெளியிடுகிறார்கள். இது மற்ற குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளலாமா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.

உதாரணமாக, பிப்ரவரியின் பிற்பகுதியில், நார்த் பாயிண்ட் சுற்றுப்புறத்தில் உள்ள கிங்ஸ் சாலையில் உள்ள ஒரு கே.எஃப்.சி உணவகத்தில் 55 வயதான சமையல்காரர் uடல் நலன் சரியில்லாததால் பரிசொத்திதுக் கொண்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், சமையல் எண்ணெயின் வெப்பம் கொரோனா வைரஸைக் கொல்லக்கூடும் என்றும், அங்கு வசிப்பவர்கள் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாகக் கருதப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்த KFC-யின் கிளை உடனடியாக மூடப்பட்டது. பின்னர் அந்த கிளை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு அதன் வாசலில் ஒரு அடையாளக் குறியீடை வைக்கப்போவதாகவும் சுகாதாரத் துறையின் மூலம் அறிவிக்கப்பட்டது

பிப்ரவரியில் மற்றொரு நாள், புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளில் ஒருவர், டூயன் முனிலுள்ள ஸீவியூ கார்டனில் உள்ள பிளாக் 1 இல் வசிக்கும் 75 வயதான ஒருவறு ஆவார். அவருக்கு முதலில் ஜனவரி 25 ஆம் தேதி அன்று கொரோனாவிற்கான அறிகுறிகள் தோன்றியது என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிப்ரவரி 18 அன்று அவர் டுயென் முன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படும் வரை, பிப்ரவரி 15  தவிர, ஒவ்வொரு நாள் காலையிலும், 5 சாம் ஷிங் தெருவில், டுவென் முன் அமைந்துள்ள ஹோய் டின் கார்டன் உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். அவர் பரிசோதனை செய்துக் கொண்டதற்கு முந்தைய நாள், 83 வயதான அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள டாக்ஸி ஓட்டுநர்களின் வாகனத்தின் எண்களையும், உறுதி செய்யப்பட்டுள்ள விமானப் பயணிகள் பயணம் செய்த விமான எண்களையும் சுகாதாரத் துறை வெளியிடுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புக் கொண்டுள்ள பொதுமக்கள் அதை அறிந்துக் கொள்ள முடியும். சிங்கப்பூரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான தொடர்புகளைக் கண்டறியவும், கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியமானத் தொடர்புகளைக்  கண்டறியவும் காவல்துறை சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளோடு தொடர்பு கொண்டிருக்கும் பொதுமக்கள் தாமாகவே முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில் சிங்கப்பூர் இந்த நோயாளிகளின் விவரங்களை  பகிரங்கமாக அறிவித்துவருகிறது.

தொற்றுநோய்க்கு சாத்தியமான ஒவ்வொருவரையும் விசாரித்து தனிமைப்படுத்த ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா மேற்கொண்ட அதி தீவிரமான மற்றும் கடுமையான முயற்சிகளை வரவேற்றுள்ள உலக சுகாதார அமைப்பு, அதை பின்பற்ற மற்ற நாடுகளுக்கும்  ஜனவரி முதல் உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துக் கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மரியா வான் கெர்கோவ் இந்த வாரம் ஊடகங்களில் பேசும்போது, “ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான புதிய தினசரி நோயாளிகளைக் கையாளும் நாடுகளுக்கு, ஒவ்வொரு புதிய  நோயாளியை   கண்டுபிடிப்பது கடினம் என்பதையும், இது உண்மையில் மிகபெரிய வேலை என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனாலும், நாங்கள் உங்களைக் கேட்கிறோம். இந்த நாடுகளை உதாரணங்களாக எடுத்துக் கொண்டு, கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அவர்கள் அனுபவத்தின் மூலம் நமக்கு அளித்துள்ள பாடங்களை கற்றுக் கொண்டு, பின்பற்றுவது நமக்கு மிகவும் முக்கியமானது.” என்றார்.