சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் திடீர் அறிவிப்பு! தமிழ் விமானி சரவணன் அசத்தல்

சென்னை:

சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் விமான நிறுவன்ததில் விமானியாக பணிபுரிந்து வரும் தமிழரான சரவணன், விமானத்தில் திடீரென தமிழில் அறிவிப்பு  செய்தார். இதனால், விமான பயணிகள் ஆச்சரியமும், சந்தோஷமும் அடைந்தனர். சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘சிங்கப்பூரி ஸ்கூட்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருபவர் தமிழரான சரவணன் அய்யாவு. இவருக்கு  தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாகவும், அதை சமீபத்தில், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நிறைவேற்றி உள்ளார். விமானத்தில்  திடீரென தமிழில் வழங்கப்பட்ட அறிவிப்பு தான் தற்போது வைரல் ஆகியுள்ளது.

பொதுவாக விமானத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும்  நிலையில், திடீரென தமிழில் அறிவிப்பு வெளியானது, விமான பயணிகளிளுக்கு  இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சரவணனின்  அறிவிப்பில், சென்னை மற்றும் சிங்கப்பூரின் வானிலை எவ்வாறு உள்ளது? எவ்வளவு அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம்? போன்வற்றை தமிழில் அறிவித்து, இதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.

அதில், ‘எனக்கு சிறிய லட்சியம் ஒன்று இருந்தது. அதாவது, விமானத்தில் ஆங்கிலத்தைத் தொடர்ந்து தமிழில் அறிவிப்புச் செய்வது. அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கேப்டன் மற்றும் எனக்கு உதவிய கேபின் குழுவினருக்கு நன்றி’ என்று சரவணன் அய்யாவு குறிப்பிட்டுள்ளார். விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குறித்து பயணிகளுக்கு விமானிகள் அறிவிப்பர். இந்த அறிவிப்பை சரவணன் தமிழில் அறிவித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.