அண்டார்டிகா பைன் தீவில் பனிப்பாறையின் நடுவில் திடீரென பிளவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் 5-வது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகா பெரும்பாலும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் பனிகட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கு அண்டார்டிகா பைன் தீவு பனிப்பாறை திடீரென 266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பிளவு ஏற்பட்டிருப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. செயற்கைகோள் எடுத்து அனுப்பி புகைப்படத்தில் இது பதிவாகியுள்ளது.

இந்த பைன் தீவு பாறை அண்டார்டிகாவிலேயே மிக வேகமாக உருகும் பனிப்பாறையாகும். இந்த பனித்தீவு முழுவதும் உருகினால் உலகின் ஒட்டுமொத்த கடல் நீர்மட்டம் சுமார் 1.7 அடி அளவுக்கு உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே இந்த பனிப்பாறையின் தன்மை உலக ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு விநாடியும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 2௦15ம் ஆண்டு 225 சதுர அடி அளவு கொண்ட பனிக்கட்டிகள் பிரிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.