சென்னை

ஜா புயல் காரணமாக கரும்புகள் அழிந்ததால் கோயம்பேட்டுக்கு கரும்பு வருவது கடுமையாக குறைந்து விலை உயர்ந்துள்ளது.

கடந்த 8 ஆம் தேதி முதல் கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் பொங்கல் சிறப்புச் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் பொங்கல் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. பண்டிகைக்கு இன்னும் இரு தினங்களே உள்ளதால் இங்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இங்கு விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைப்பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள இந்த சிறப்பு சந்தையில் மஞ்சள் செடிகள் ரூ. 20 முதல் ரூ.40 வரையும் வாழைக்கன்று ரூ.40 ஆகவும் ஜோடிகளாக விற்கப்படுகின்றன. புக்களில் சாமந்தி கதம்பை ஆகியவை முழம் ரூ.30 வரை விற்கப்படுகின்றன. அதைத் தவிர ஒரு பூசணிக் காய் (சுமார் 5 கிலோ) ரூ.70, ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.30, மாவிலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.40, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5-க்கு விற்கப்படுகின்றன.

டெல்டா மாவட்டத்தில் வீசிய கஜா புயலால் ஏராளமான கரும்புப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதனால் கோயம்பேட்டுக்கு கரும்பு வரத்து மிகவும் குறைந்துள்ளது. கரும்புகள் தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் வருகின்றன. ஏற்கனவே அந்தப் பகுதிகளில் கரும்பு தேவை அதிகம் உள்ளன. ஆகவே மிகக் குறைந்த அளவில் கரும்புகள் வந்துள்ளன.

எனவே கரும்புகளின் விலை உயர்ந்துள்ளது. தற்போது கரும்பு மொத்த விலையில் 15 கரும்புகள் கொண்ட கட்டு அவற்றின் தரத்துக்கு ஏற்ப ரூ.250 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.40 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.300 வரை விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.