சென்னை:
சென்னையில் கார் – பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபரை அடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வாலிபர் அடையாறு காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் தான் யாரையும் அடிக்கவில்லை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கூறப்படுவதாவது:
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவருடன் நேற்று மாலை அடையாறு சாலையில் சென்றார்.    அப்போது அடையாறு மேம்பாலத்தின் மீது  அவரது பைக் சென்ற  போது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நின்றது.  இதை எதிர்பாராத பிரவீன் குமார் பைக்கை நிறுத்த முயன்றபோது அது முடியாமல் கார் மீது மோதியது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த பெண் காரை விட்டு இறங்கி பிரவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதனால் அங்கு கூட்டம் கூடியது. பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் தனது காரில் அந்தப்பக்கம்  வந்த நடிகர் சூர்யா, கூட்டத்தைப் பார்த்து காரை நிறுத்தி இறங்கினார்.
download (2)
பிரச்சினை என்னவென்று விசாரித்த சூர்யா, பிரவீன் குமாரை   அறைந்தார்.  இதனால் அவர் கீழே விழுந்து விட்டார். இதை பலர் செல்போனில் படம் பிடித்தனர்.  இதையடுத்து சூர்யா அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டார்.
பிரவீன் குமார் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி செய்துகொண்டு,  சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில், “நடிகர் சூர்யா எந்தவித சம்பந்தமும் இல்லாமல் என்னை பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது. அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம்.  எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவோ, “நான் பிரவீன் குமாரை அடிக்கவில்லை.   பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டேன். கூட்டம் கூடியதால் அங்கிருந்து சென்றுவிட்டேன். அடித்ததாக சொல்வது வதந்தி” என்றார்.