ருமபுரி : நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட  மாணவரின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.  தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால், தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆதித்யாவின் உடலை காவல்துறையினர்  உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை ஆதித்யாவின் உடல்,  உடற்கூறாய்வு நடைபெற்ற நிலையில்,  அவரது உடலை பெற அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.   உயிரிழந்த மாணவரின் பெற்றோர் தங்கள் சம்மதமில்லாமல் உடற்கூறாய்வு நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டினர். உடற்கூறாய்வு செய்யும் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்குவந்த  தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உயிரிழந்த மாணவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வனும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர்  மாணவரின் பெற்றோரை சந்தித்து பேசி,  ஆறுதல் தெரிவித்தனர்.  இதனால் ஓரளவு அமைதி ஏற்பட்டது.

உயிரிழந்த மாணவரின் உடல், சேலம் மாவட்டம் பூசாரிபட்டியலில் அடக்கம் செய்யப்பட உள்ளது.