நாமக்கல்:  நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோடு மாணவர் மோதிலால் உடல் தகனம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீட் தேர்வையும் மத்தியஅரசு விடாப்பிடியாக நடத்தி வருகிறது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், அதை கண்டுகொள்ளாமல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்வு அச்சம் காரணமாக, தமிழகத்தில் நேற்று (12ந்தேதி) ஒரே நாளில் 3 மாணாக்கர்கள் தற்கொலை முடிவை நாடியுள்ளனர். இதனால், தமிழக மக்களிடையே கொந்தளிப் பான மனநிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தற்கொலை செய்துகண்ட மாணவன், மோதிலால்  உடல் கைப்பற்றப்பட்டு, இன்று உடற்கூறாய்வு சோதனை நடத்தப்பட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவரின் வீட்டில் வைக்கப்பட்ட மோதிலால் உடலுக்கு அவரது உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாணவர் மோதிலாலின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செங்கோடன்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில்,  மாணவர் மோதிலால் மூன்றாம் முறையாக நீட் தேர்வு எழுதவிருந்ததும், தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.