சென்னை ஐ.ஏ.எஸ்.அகடமியில் படித்த பெண் தற்கொலை: அகடமி சொல்வது  என்ன?

காயத்திரி

சென்னை:

சென்னை ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்துவந்த இளம்பெண் மர்மமாக மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்  நாகராஜ், அருளழகி தம்பதியினர். இவர்களுக்கு காயத்திரி, வினோத்குமார் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பொறியியல் பட்டப்படிப்பு படித்து முடித்த காயத்திரி சென்னையில் சைதை துரைசாமி நடத்தும்   “மனித நேய இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில்” சேர்ந்து  படித்து வந்துள்ளார்.  தனியார் விடுதி ஒன்றில் இவர் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்து உயிருக்குப் போராடிய நிலையில் தனியார் மருத்துவமனையில், காயத்ரி சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காயத்ரி  மரணமடைந்தார்.

உறவினர்கள் போராட்டம்

பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக மாணவியின் வீட்டிற்கு (சேலம் மாவட்டம்  மேட்டூர்) காயத்திரியின் உடலை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், காயத்திரி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, காயத்திரியின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் உடலை நடு ரோட்டில் வைத்துப் போராட்டம் நடத்தினர்.

காயத்திரியின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.    மேலும், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் காயத்திரி டார்ச்சர் செய்யப்பட்டதாகவும் அதனாலேயே தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காயத்திரியின் உடலுக்கு, இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

இது குறித்து மனித நேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் ம.கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

“இது பொது நோக்கோடு நடத்தப்படும் மையம். தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவு  மாணவர்கள்.. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நடந்துவருகிறது. இதுவரை எங்கள் மையத்தில் படித்தவர்களில் இரண்டாயிரத்து எந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் மத்திய மாநில அரசு பணியில் உயர் பதவியில் பொறுப்பு வகிக்கிறார்கள்.

இந்தமையத்தில் ஆறாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு படிப்பவர்கள், படிக்கும் நேரத்தில் மட்டுமே மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். மற்ற நேரங்களில் அவர்கள் தங்கியிருப்பது, வெளியில் செல்வது, நட்பு வட்டாரங்களுக்கும் மனித நேய மையத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது”என்றார்.

மேலும் அவர், “மனிதநேய அறக்கட்டளையின் அண்ணா நகர் மையத்தில் இலவச விடுதி கிடையாது. அவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

காயத்திரி தற்கொலை முயற்சி மேற்கொண்டது பற்றியோ, மரணமடைந்தது பற்றியோ, ஊருக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டது பற்றியோ எவரும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்துதான் விசயத்தைத் தெரிந்துகொண்டோம்.

கார்த்திகேயன்

காயத்திரி தங்கியிருந்த விடுதியில் தங்கியிருக்கும் சக தோழிகள் சிலரிடம் பேசினேன். .

அவர்கள், “காயத்திரி ஆரம்பத்தில்  சென்னையில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி படித்துவந்தார். அங்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து தனியார் விடுதியில் தங்கி படித்துவந்தார்.

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலையில் தனது மாமா பிரபுவுடன் காயத்ரி வெளியில் சென்றுவிட்டு திரும்பினார். வந்த கொஞ்ச நேரத்திலேயே தான் அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டாகவும், வயிறு வலிப்பதாகவும் அறைத் தோழிகளிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் காயத்திரியின் மாமா பிரபுவும் போன் செய்து, காயத்ரி குறி்த்து விசாரித்தார். அவரிடம் தகவலைச் சொன்னதும் அருகில் உள்ள முகப்பேர் எஸ்.கே.எஸ். மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி கூறிவிட்டு, தானும் அங்கு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி நாங்கள் எஸ்.கே.எஸ். மருத்துவமனையில் காயத்திரியை அழைத்துச் சென்றோம். அங்கு பிரபு காத்திருந்தார்” என்று தெரிவித்தனர்.

எஸ்.கே.எஸ். மருத்துவமனையில் மரணமைடந்த காயத்திரியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அனுப்பியது அந்த மருத்துவமனையில் தவறு. மேலும் காயத்ரி விசம் அருந்திவிட்டார் என்று அனுமதிக்கப்பட்ட போதே காவல் துறையிடம் தெரிவித்து புகார் பதிந்திருக்க வேண்டும். இரண்டும் மருத்துவமனையின் தவறு.

இது குறித்து  எஸ்.கே.எஸ். மருத்துவமனையில், விசாரித்தேன். அவர்கள், “காயத்திரியின்  அக்காள் கணவர் பிரபுதான் மருத்துவமனையில், கையெழுத்திட்டு சேர்த்தார். சிகிச்சை பலனின்றி காயத்திரி மரணமடைந்தார். அப்போது அவரது அக்காள் கணவர் பிரபு, மற்றும் பிரபு அக்காள், காயத்திரியன் பெற்றோர்  ஆகியோர்தான் உடலை வாங்கிச் சென்றனர்.

அந்த பெண் மரணம் அடைந்ததும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர், “ உடலை நாங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கிறோம். பிரேத பரிசோதனை வேண்டாம்” என்று மன்றாடினர்.

ஆகவே நான் மரண சான்றிதழ் கொடுத்து அனுப்பினோம் என்று மருத்துவமனையில் தெரிவித்தார்கள்” என்று நம்மிடம் கூறினார் கார்த்திகேயன்