5 மாதங்கள் முன்பு கிணற்றில் விழுந்து பலியான சுஜித் மாமா! ஒரே குடும்பத்தை சூழ்ந்த சோகங்கள்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்தின் மாமாவும் 5 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கிணறு ஒன்றில் விழுந்து இறந்த சம்பவம் தற்போது தெரிய வந்திருக்கிறது.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தான். சிறுவனை காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக, சடலத்தை மட்டுமே ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்க முடிந்தது.

ஆழ்துளை கிணறு மூடப்படும் காட்சி

தமிழகத்தையே சிறுவன் சுஜித் மரணம் உலுக்கியது. ஆழ்துளை கிணறால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியது.

இந்நிலையில், சுஜித்தின் மரணத்துக்கு 5 மாதங்கள் முன்பு, அவரது மாமாவும் கிணற்றில் விழுந்த உயிரிழந்த சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளி வந்திருக்கிறது. இது பற்றி கூறப்படுவதாவது:

பலியான சுஜித்தின் மாமா பெயர் லியோ ஆரோக்கியதாஸ். வயது 43. ராணுவத்தில் பணியாற்றிய அவர், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். சுஜித்தின் வீட்டுக்குப் பின்புறம் கிணறு உள்ளது.

அந்த கிணறு தான் சுஜித் இறந்த ஆழ்துளை கிணறு அருகே இருந்திருக்கிறது. 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இல்லை. உறைகிணறாகும். அதில் லியோவின் குடும்பம் வளர்த்து வந்த கோழி ஒன்று விழுந்துள்ளது.

கயிறு கட்டி அந்த கோழியை அவர் எடுத்துக் கொண்டு, மேலே வந்துள்ளார். கோழியை மேலே கொண்டு வரும்போது கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்துள்ளார்.

இதுகுறித்து சுஜித்தின் மற்றொரு மாமா ஜான் மரியா லூயிஸ் கூறி இருப்பதாவது: கோழியுடன் வெளியே வரும்போது, 60 அடி உயரத்தில் இருந்து கிணற்றில் விழுந்தார்.

தவறி விழுந்தவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட, அவர் இறந்தார். இதையடுத்து 2 மீட்டர் அகலம் கொண்ட அந்த கிணறு இரும்பு கிரில் கொண்டு மூடப்பட்டது என்றார்.