நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக விளையாடும் 22 வயதான இந்தியாவின் சுமித் நாகல், உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரரை எதிர்த்து ஆடவுள்ளார்.

இந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான இறுதி ஆட்டத்தில், சுமித், பிரேசில் நாட்டின் ஜோவோ மெனசிஸை வென்றார். இதன்மூலம் மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மாபெரும் ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரரை, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஒற்றையர் ஆட்டத்தில் விளையாடும் ஐந்தாவது இந்தியர் என்ற பெயரைப் பெறுகிறார் சுமித். இவருக்கு முன்னதாக சோம்தேவ் தேவர்மன், யுகி பாம்ப்ரி, சாகத் மைனேனி, பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் மட்டுமே கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டியில் ஆடியுள்ளவர்கள்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜுனியர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, அந்த கவுரவத்தைப் பெற்ற ஆறாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சுமித் நாகல்.