கஜா புயல் பாதிப்பு: மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை

--

தஞ்சாவூர்:

மிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தி சென்றுள்ள கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் பலியான நிலை யில், அதிர்ச்சி காரணமாகவும், தற்கொலை செய்துகொண்டும் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில, கஜா புயலால் பயிர்கள் நாசமானதை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தான் ஆசையோடு வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததை கண்ட விவசாயி ஒருவர் மனம் வெறுத்து, தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள  ஒரத்தநாடு பகுதியில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் என்ற விவசாயி. இவருக்கு   மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சொந்த மான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தொன்னந்தோப்பு உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பேணிக்காத்து வந்த இந்த தென்னந்தோப்பு கஜா புயலினால் அடியோடு சாய்ந்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டதைக் கண்ட விவசாயி சுந்தர்ராஜன் செய்தவறியாது திகைத்து,  அந்த தென்னை மரங்களையே உற்றுநோக்கியபடி வெறித்தபடி அமர்ந்திருந்தார்.

அவரை மனைவி மற்றும் பிள்ளைகள் தேற்றி வந்த நிலையில், திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுந்தர்ராஜன் மரணம் குறித்து கூறிய அவரது மனைவி அம்சவள்ளி,  தனது கணவர் தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதை கண்டு மனம் வெதும்பியதாகவும், நான், நம் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டதைவிட தென்னம் பிள்ளைகளைத்தான் பார்த்துக் கொண்டேன்…  அவை நம்மைத் தவிக்க விட்டுவிட்டு போய்விட்டதே… எனது மனம் துடிக்கிறது என்று தன்னிடம் வேதனையில்  புலம்பியதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில்,  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் கஜா புயல் காரணமாக நெற்பயிர் கள் மற்றும் வாழைத்தோப்புகள் நாசம் அடைந்தன. இதைக்கண்ட விவசாயி வைத்தியநாதன்  என்பவர்  அதிர்ச்சி அடைந்து  திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.