சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில், 7வது மற்றும் 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுர் ஆடிய ஆட்டத்தை உலகமே புகழ்ந்து வருகிறது. ஆனால், தன் மகன் முதல் டெஸ்ட் சதம் அடிக்கவில்லையே என்ற கவலையில் உள்ளார் சுந்தரின் அப்பா.

சுந்தர் மற்றும் ஷர்துல் இணைந்து 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவருமே அரைசதம் அடித்தனர். அதில், சுந்தரின் பங்களிப்பு 62 ரன்கள்.

சுந்தரின் தந்தை கூறியுள்ளதாவது, “என் மகன் சதம் அடிக்காததில் எனக்கு வருத்தமே. முகமது சிராஜ் களமிறங்கியபோது, சுந்தர் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசியிருக்க வேண்டும். அவனால் அது முடியும்.

அவன் சிக்ஸர் அடிப்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவன் பெரிய ஷாட்களை ஆடியிருக்க முடியும். ஆனால், ஆஸ்திரேலியாவின் எண்ணிக்கைக்கு மிக நெருக்கமாக நெருங்கிவருவது குறித்து அவன் நினைத்திருக்கலாம்.

நான் அவனிடம் தினமும் பேசுகிறேன். நான் பேசும்போதெல்லாம் கூறுவது, எப்போதெல்லாம் பேட்டிங் வாய்ப்பை பெறுகிறாயோ, அப்போதெல்லாம் பெரிய ரன்களை அடி என்பேன். அவனும், நிச்சயமாக செய்வேன் என்பான்” என்றுள்ளார் அவர்.