புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சுனில் அரோரா, மத்திய பாஜக அரசால், கோவா மாநில கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1980ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தான் கேடரில் பணிபுரிந்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, தேர்தல் கமிஷன் பதவிக்கு வந்தார். அதற்கு முன்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளராக இருந்தார்.

சிறந்த நிர்வாகி என்று பெயர்பெற்றவர் இவர். தற்போது, கோவா மாநிலத்தின் ஆளுநர் பதவி காலியாக இருப்பதால், இவர் அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தொடர்புடைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் முதன்மை செயலாளராக பணியாற்றியவர்.

தற்போது, கோவா மாநில ஆளுநர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வருகிறார் மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி. கோவா ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், அம்மாநில முதல்வர் பிரமோத் சவந்துடன் ஏற்பட்ட மோதலால் பதவி விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.