ஓய்வை அறிவித்தார் ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா!

--

புதுடெல்லி: புகழ்பெற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா, சர்வதேச ஹாக்கி விளையாட்டிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது 28 வயதாகும் சுனிதா, முழங்கால் காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றிருந்த இவர், 2018ம் ஆண்டின் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று, வெள்ளிப் பதக்கத்தை வெல்வதற்கு காரணமாக இருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இவர் இதுவரை இந்தியாவிற்காக 139 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றது தனது அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ள சுனிதா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது தனது துரதிருஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

முழங்கால் காயத்திற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதால், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதாகவும், அதேசமயம், காயத்திலிருந்து மீண்டபிறகு உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.