போராடித் தோற்ற பஞ்சாப்!

--

Sunrisers Hyderabad 207 for 3 beat Kings XI Punjab
ஐ.பி.எல் போட்டியில் போராடிய பஞ்சாப் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியாவில், 10வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று, மொகாலியில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய வார்னர், 25 பந்தில் அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய ஷிகர் தவான், தன்பங்கிற்கு அரைசதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த போது மேக்ஸ்வெல் பந்தில் வார்னர் (51) போல்டானார். தவான், 48 பந்தில் 77 ரன்கள் எடுத்து அவுட்டானார். யுவராஜ் சிங் (15) நிலைக்கவில்லை. மோகித் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய வில்லியம்சன் அரைசதம் கடந்தார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் (54), ஹென்ரிக்ஸ் (7) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் அணி சார்பில் மேக்ஸ்வெல் 2, மோகித் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு மார்டின் கப்டில் (23) சுமாரான துவக்கம் தந்தார். மனன் வோரா (3), கேப்டன் மேக்ஸ்வெல் (0) ஏமாற்றினர். இயான் மார்கன் (26) ஆறுதல் தந்தார். விரிதிமன் சகா (2) சொதப்பினார். ஷான் மார்ஷ் அரைசதமடித்தார். இவர், 50 பந்தில் 84 ரன்கள் (14 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அவுட்டானார். அக்சர் படேல் (16), அனுரீத் சிங் (15) நிலைக்கவில்லை.

பஞ்சாப் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இஷாந்த் சர்மா (5) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் நெஹ்ரா, சித்தார்த் கவுல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.