டில்லி அரசுப் பள்ளிகளில் சிறப்புப் பாடம் எடுக்கப் போகும் சூப்பர் 30 ஆனந்த் குமார்

டில்லி

டில்லி அரசுப்பள்ளிகளில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பாடங்களை சூப்பர் 30 திரைப்பட புகழ் ஆனந்த் குமார் நடத்த உள்ளார்.

சமீபத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்னும் திரைப்படம் வெளியாகி உள்ளது.   தற்போது இந்த திரைப்படம் நாடெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.   இந்த திரைப்படம் பாட்னாவை சேர்ந்த கணித அறிஞர் ஆனந்த் குமார் என்பவரது வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.  இந்த படத்துக்கு டில்லி அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோதியா, “டில்லியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்க அரசு சூப்பர் 30 திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.    அத்துடன் இந்த திரைப்படத்தின் உண்மை கதாநாயகனான ஆனந்த் குமாரை டில்லி ள்ளிகளில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்காகச் சிறப்பு பாடம் நடத்த அரசு வேண்டுகோள் விடுத்தது.

அதற்கு ஆனந்த் குமார் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் ஒவ்வொரு மாதமும் டில்லி மாணவர்களுக்கு ஐஐடி மற்றும் இணைந்த நுழைவுத் தேர்வுகளுக்குச் சிறப்பு வகுப்புக்கள் நடத்த உள்ளார்.  இந்த சிறப்பு வகுப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும்” என அறிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது டிவிட்டரில், “எனது சூப்பர் 30 திரைப்படத்துக்கு வரி விலக்கு அளித்த டில்லி கல்வி அமைச்சர் சிசோடியாவுக்கு மிகுந்த நன்றிகள்.  அத்துடன் அரசு பள்ளிகளில் ஆனந்த் குமாருக்கு வகுப்பு எடுக்க வாய்ப்பளித்தற்கும் நன்றி” எனப் பதிந்துள்ளார்.

இந்த திரைப்படத்துக்கு ஏற்கனவே பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது