வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 204 ரன்களை விரட்டிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்றது.

சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடிப்பதற்கு எளிய ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவுசெய்தது. ஆனால், அந்த முடிவு தவறோ என்று நினைக்கும் வகையில், துவக்கத்தில் நியூசிலாந்து துடைத்து எடுத்துவிட்டது.

ரன் எண்ணிக்கை 240 வந்துவிடுமோ என்று நினைக்குமளவிற்கு சென்ற நிலை மாறி, நியூசிலாந்து அணி 203 ரன்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

அந்த அணியின் காலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். மார்ட்டின் குப்தில் 30 ரன்களை அடித்தார்.

ஆனால், இந்த இலக்கு எங்களுக்குப் பெரிதல்ல என்ற மனநிலையில் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 7 ரன்களுக்கு ரோகித் ஷர்மா அவுட் ஆனாலும், ராகுலும் கோலியும் வெற்றிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடினர்.

அதேசமயம், களத்தில் நானும் இருக்கிறேன் என்று நிரூபிக்கும் வகையில் ஷ்ரேயாஸும் தன் ஆவேசத்தைக் காட்டினார். ராகுல் 27 பந்துகளில் 56 ரன்களும், கோலி 32 பந்துகளில் 45 ரன்களும், ஷ்ரேயாஸ் 29 பந்துகளில் 58 ரன்களும் அடித்து, சரியாக 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது இந்திய அணி.

மொத்தம் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில், தற்போதைய நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.