சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் 8 மாத கர்ப்பிணி: சாதித்த சுனைனா படேல்

தண்டேவாடா:  சத்தீஸ்கரில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாவோயிஸ்டுகளை ஓழிக்கும் கமாண்டோ பிரிவில் பணியில் இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம். அவர்களை ஒழிக்க மாவட்ட ரிசர்வ் படையும் களத்தில் உள்ளது. அவர்களில் பெண் கமாண்டோவாக சுனைனா பட்டேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இத்தனைக்கும் அவர் 8 மாத கர்ப்பிணி.

இதுபற்றி சுனைனா கூறியதாவது: நான் பணியில் சேர்ந்தபோது 2 மாத கர்ப்பமாக இருந்தேன். எனது கடமைகள் அனைத்தையும் நான் நேர்மையுடன் செய்தேன்.

ஆனால் இப்போது எனது மூத்த அதிகாரிகளால் முறையான ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று கேட்டாலும் நான் பணியில் இறங்கி அதை மிகவும் நேர்மையுடன் செய்வேன் என்றார்.

இது குறித்து தண்டேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் கூறியதாவது: சுனைனா கடமையில் இருந்தபோது ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்டது.

அப்போதும் கூட அவர் கடமையில் இருந்து வெளியேற தயங்கினார். ஆனால் அவரது உடல்நிலை குறித்து நாங்கள் கவலைப்படுவதால் போதுமான ஓய்வு எடுக்குமாறு அவளிடம் கேட்டுள்ளோம் என்று கூறினார்.