விவசாயிகளுக்கு ஆதரவு: 3-ந்தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு! வெள்ளையன்

சென்னை,

டில்லியில் போராடி வரும் விவசாயிகளின்  போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏப்ரல்  3-ந்தேதி கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறி உள்ளார்.

கடந்த 17 நாட்களுக்கும் மேலாக டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள்  வரும் 3ந்தேதி கடைகளை அடைத்து தங்களது ஆதரவை விவசாயிகளுக்கு தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘உலக வர்த்தக ஒப்பந்தம்’ என்ற தேசதுரோக ஒப்பந்தத்தால், விவசாயம் முதல் சில்லரை வணிகம் வரை நமது பாரம்பரிய சுயதொழில்கள் அனைத்தும் திட்டமிட்டு நசுக்கப்பட்டு வருகின்றன. சில்லரை வணிகத்துக்கு எதிரான சதிகளை எதிர்க்க எவரும் முன்வராத நிலையில், கோடிக்கணக்கான வணிகர்களான தங்கள் சுயதொழிலை பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் உற்பத்தியை சந்தைப்படுத்துவதன் மூலம் அவர்களின் நண்பனாக திகழும் வணிகர்களாகிய நாங்கள், எங்கள் பிரச்சினைக்காக மட்டுமின்றி, விவசாயிகளுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்.

அதன்படி 3-ந்தேதி (திங்கட்கிழமை) விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமையை மீட்பதற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் நடத்த இருக்கும் போராட்டத்தில் பேரவையும் முழுமையாக பங்கேற்க முடிவெடுத்துள்ளது.

இதற்காக அன்றைய தினம் தமிழகத்தில் 60 லட்சம் கடைகளை அடைத்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம்.

விவசாயம், வணிகம், சுயதொழில்களை அழிக்கும் விதத்திலும், சுயதொழில்களில் அந்நிய ஆதிக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் விதத்திலும் திட்டமிட்டு செயல்படும் மத்திய ஆட்சியாளர்களின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயிகளுடன் கைகோர்த்து போராட முன்வரவேண்டும்.

இந்த ஆண்டு வணிகர் தின மாநாட்டை ‘வணிகர் உரிமை பிரகடன மாநாடு’ என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் மே 5-ந்தேதி நடத்துகிறோம். இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா மற்றும் லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.