கொழும்பு:

லங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வடக்கு மாகாண கவர்னராக நியமிக்கப்படுவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று, அதிபராக பதவி ஏற்றுள்ள நிலையில், அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சே இன்று பிரதமராக பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில், ராஜபக்சே கட்சிக்கு ஆதரவு தெரிவித்த, இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு கவர்னர் பதவி வழங்க ராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றன. அதன்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண கவர்னராக அவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த தகவலை முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார். தாம் நீண்ட காலமாக மக்களுக்கு சேவைகளை ஆற்றி வருவதாகவும், பதவிகளைப் பெற்றுக் கொண்டுதான் சேவையாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை, வட மாகாண ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டு உள்ளார்.