சென்னை:

முன்னாள் அதிமுக எம்எல்ஏவும்,  அமமுக கொள்கை பரப்பு செயலாளருமான தங்கத்தமிழ் செல்வன்  தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் ஐக்கியமாகிறார்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், டிடிவி தினகரனின் வலதுகரமாக செயல்பட்டவருமான தங்கத்தமிழ் செல்வன் நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், டிடிவி தினகரன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார்.

அதைத்தொடர்ந்து,தங்கத்தமிழ் செல்வன் தன்னைக் கண்டால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார் என டிடிவி தினகரன் அவரை கடுமையாக   விமர்சித்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளர் களான வெற்றிவேல், புகழேந்தி போன்றோரும் தங்கத்தமிழ்செல்வன் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இந்த நிலையில், தங்கத்தமிழ்செல்வன் கடந்த வாரம்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியதாக தகவல் பரவியது. இதன் காரணமாக அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில், அவரை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த தாக கூறப்படுகிறது.  இதுதொடர்பான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வெளிப்படை யாகவே தங்களது எதிர்ப்பை பறைசாற்றினர்.

இதன் காரணமாக, தான்  திமுகவுடனும், அதிமுகவுடனும் நான் இணையப்போவதில்லை என்று நேற்று செய்தியாளர்களிடம் தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்தார்.

ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் அவரது மனநிலை மாறி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தமிழ் செல்வன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகவும், நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு ஆதாரமாக, அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் தேனியில் இருந்து வாகனங்கள் மூலம் சென்னை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தபோது, தங்கத் தமிழ்செல்வனும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.