புவனேஸ்வர்,

நாங்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தாலும் தேசிய குடியுரிமை பதிவேட்டை எதிர்க்கிறோம் என ஒரிசா முதல்வர் நவீன் ப்ட்நாயக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது   இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இவ்வாறு குடியுரிமைப் பெறக் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் தகுதியானவர்களாக்க கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.     நேற்று  ஒடிசா மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் ,‘‘குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியர்களுடன் தொடர்பு உடையது அல்ல. மாறாக இது முழுவதும் வெளிநாட்டினர் தொடர்புடையது. ஆகையால் இதனை பிஜூ ஜனதாதளம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை  ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.  ஆனால் இந்திய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியர்கள் தொடர்புடையது. இதனை நாங்கள் ஏற்கவில்லை , இதை நாங்கள் எதிர்க்கிறோம்’’ எனக் கூறி உள்ளார்.