காவல்துறையினரை மிரட்டுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்குங்கள்! உயர்நீதி மன்ற நீதிபதி

மதுரை:

காவல்துறையினரை மிரட்டுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்குங்கள் என்று தமிழக அரசக்கு உயர்நீதி மன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே வேளையில்,  நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் எனலம்  தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

சொத்து தொடர்பான வழக்கு  தொடர்பாக சிவகங்கை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்குப்பதிவு செய்யும் காவல் அதிகாரிகளை மிரட்டும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தவர், வழக்குப்பதிவு செய்வதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குற்ற வழக்கில் தொடர்புள்ளவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது என்று கூறிய நீதிபதி, காவல்துறையினரை மறைமுகமாக மிரட்டும் வகையில் உயர் நீதிமன்றத் தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாகவும், பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும்,  காவல்துறையினர் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர் என்றவர், அப்படிப்பட்டவர்களை நீதிமன்றமும் உயரதிகாரிகளும் பொதுமக்களும் பாதுகாக்க வேண்டும் என்றும்,  நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் என தமிழக அரசை நீதிபதி கேட்டுக்கொண்டார்.