Random image

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் வழக்கு: அக்டோபர் 10ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பாஜக அரசின் மீதான ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ந்தேதிக்கு  என்று உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதில் மாபெரும் ஊழல் நடத்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த  வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர்  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அமர்வில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா, இந்த  வழக்கு தொடர்பாக சில கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய விரும்புவதாகவும், இதன் காரணமாக வழக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றுகோரிக்கை வைத்தார்.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்தது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல்…?

2012-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.  ஆனால்  மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதும், 2016-ம் ஆண்டில் ரூ.560 கோடி என்பது  ரூ.1,600 கோடியாக அதிகரித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன் காரணமாகவே போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான  போர் விமானங்களை கொள்முதல் செய்வதில், அரசின்  கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகவும்,  ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.