முக்கிய வழக்குகளின் விசாரணையை ‘நேரடி ஒளிபரப்பு’ செய்யலாம்: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி:

முக்கிய வழக்குகளின் விசாரணையை நீதிமன்றங்களில் இருந்து  ‘நேரடி ஒளிபரப்பு’ செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு கூறி உள்ளது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணை மற்றும் சட்டமன்றங்களில் நடைபெற்று வரும் விவாதங்கள், பணி நியமன நேர்காணல் போன்றவைகளை  நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் கடந்த ஜூலை 9ந்தேதிய விசாரணையின்போது, உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், விசாரணை நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என்றும், நேரடி ஒளிபரப்பு செய்வதன் காரணமாக, விசாரணை குறித்து  கிராமப்புற மக்களும்  அறிந்து கொள்ள முடியும் என்று நீதிமன்ற செயல்பாடுகள், வழக்கு விசாரணைகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்து இருந்தது. இதுகுறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்கும் படியும் கோரியிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு நேரடி ஒளிபரப்புக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், அதற்கான நெறிமுறைகளே உருவாக்க வற்புறுத்தி இருந்தது. இந்த வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணைகளும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்தா அமர்வு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில்,  நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளின் விசாரணைகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்குவதாகவும், வழக்கு விசாரணையை ஒளிபரப்ப போதுமான விதிமுறை களை உருவாக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.