சிபிஐ இயக்குனர்கள் மீதான புகார்: லஞ்சம் கொடுத்த தொழிலதிபருக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி:

சிபிஐ இயக்குனர்கள் மீதான லஞ்ச புகார் காணமாக இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பட்ட நிலையில், அவர்களுக்கு லஞ்சம் கொடுத்த தொழிலதிபர் மற்றும் தரகருக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக, அவர்களை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தர விடப்பட்டது. அதைத் தொடர்ந்து   இணை இயக்குனர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீது புகார் அளித்த சதீஷ் சனா, உச்ச நீதிமன்றத்தில்  பாதுகாப்பு கேட்டு  மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், பிஐ சிறப்பு இயக்குனர் மீது புகார் அளித்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் ஐதராபாத் போலீசார் தனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  அப்போது, தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்படி ஐதராபாத் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை சதீஷ் சனா பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட சிபிஐ சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

சிபிஐ இயக்குனர்களுக்கு வழக்கை முடித்து வைக்க லஞ்சம் கொடுத்ததாக ஐதராபாத்தை சேர்ந்த  தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் சி.பி.ஐ.யிடம் அளித்த புகாரில்,  இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.