வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வன அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

டெல்லி: வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்து உள்ளது.

உலகில் வனஅதிகாரிகளின் மரணங்கள் அதிகளவில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போது, வன அதிகாரிகளுக்கு ஆயுதமும், புல்லட் புரூப் ஆடைகளும், வாகனங்களும் மத்திய அரசு வழங்குமாறு அறிவுறுத்தியது.

தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், உலகில் வன அதிகாரிகளில் 30% இறப்புக்கள் இந்தியாவில் இருப்பதாக கூறினார். அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது:

குற்றத்தின் வருமானம் மில்லியன் டாலர்களில் உள்ளது. இது ஒரு சர்வதேச குற்றம். அண்மையில், எறும்புத்தின்னிகள் தோல் வியாபாரம் சீனா வரை நீண்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது, ஏனென்றால் அவை சில விஷயங்களுக்கு நல்லது என்று மக்கள் நம்புகிறார்கள்.

வனத்துறை ஊழியர்களுக்கு உதவிட சிபிஐ போன்ற முக்கிய அமைப்புகளை ஈடுபடுத்தவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். குற்றங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கண்டறிந்து விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்தில் ஒரு தனி பிரிவு இருக்க வேண்டும்.

அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வன அதிகாரிகள் ஆயுதம் வைத்திருப்பதால் யாரும் அவர்களின் அருகில் வர துணிவதில்லை. மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன காவலர்கள் லத்திகளுடன் சுற்றுகின்றனர். அவர்களை வேட்டையாளர்கள் நெருங்குவது இல்லை.

மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு வன அதிகாரிகளிடையே இந்த சமத்துவமற்ற நிலைமை ஏன்? நகரங்களில் காவல்துறை அதிகாரிகளை விட வன அதிகாரிகளுக்கு பெரிய பொறுப்புகள் உள்ளன. அவர்கள் காடுகளின் பெரிய பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட பதவிகளுக்கு மேல் உள்ள வன அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு, புல்லட் ப்ரூப் உள்ளாடைகள், தலைக்கவசங்கள் மற்றும் வாகனங்கள் தேவை. ஆயுதமேந்திய வேட்டையாளர்களுக்கு எதிராக நிராயுத பாணிகளான வன ஊழியர்களால் எப்படி சட்டத்தை நிலைநாட்ட முடியும்.

எனவே வன அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி சொலிசிட்டர் ஜெனரல் ராவ், ஷ்யாம் திவான் ஆகியோர் கூட்டாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாப்டே வழக்கு விசாரணையையும் 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.