டெல்லி: அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து மத்திய அரசு பதில்தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. 2017- 18ம் ஆண்டில் காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அதிகரித்து வரும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை தொடரவேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.மாநிலங்களில் மனித உரிமைகள் ஆணையம் செயல்படுகிறதா என்ற தகவலை அளிக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.