டில்லி:

ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில், முடிவை வெளியிட, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உச்சநீதி மன்றம் விதித்த தடை நவம்பர் 13ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதியில்,அதிமுகவை சேர்ந்த இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அவர்  சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, வாக்கு எண்ணிக்கையின்போது,முறைகேடு நடை பெற்றதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணிகள் கடந்த வாரம் நடைபெற்றது.

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து இன்பதுரை எம்எல்ஏ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் முடிவுகளை வெளியிட 23ம் தேதி வரைதடை விதிப்பதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, தடை 23ந்தேதியுடன்  முடிவடைந்த நிலையில், வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதித்த தடையை  நவம்பர் 13ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.