தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் தடை

டில்லி:

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் துவங்க அனுமதி அளிப்பது குறித்து 8 வாரத்துக்குள் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். இதற்கு அனுமதி அளிப்பதோடு இல்லாமல், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் தமிழக அரசு உதவ வேண்டும்.

பள்ளிகள் அமைய 25 ஏக்கர் நிலம் வழங்குதல், தடையில்லா சான்று விரைவில் பெற உதவுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே பள்ளிகள் இத்தனை காலம் துவங்கப்படாததற்கு காரணம்’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ‘‘நவோதயா பள்ளிகளைத் திறக்க போதிய அவகாசம் இல்லை என்ற தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டது.