டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும்,  மத்திய விஸ்டா திட்டத்துக்கும்  ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்  நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனால், புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ.861.90 கோடி செலவில்  64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை, டிசம்பர் 10ந்தேதி (2019) அன்று நடைபெற்றது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, புதியநாடாளுமன்றம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடத்  திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த நவம்பா் மாதம் 5 ஆம் தேதி  புதிய நாடாளுமன்றம் கட்ட தடை விதித்தது. அதே வேளையில்,  பூமி பூஜைக்கு தடை விதிக்கவில்லை.  வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்ததுஅதனால்,  திட்டமிட்டபடி  பூமி பூஜை  நடைபெற்றது.

இந்த நிலையில், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  தீர்ப்பில்,  புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் (Supreme Court) தீர்ப்பு வழங்கியுள்ளது.  `கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு பாரம்பர்யப் பாதுகாப்புக்குழுவின் ஒப்புதல் தேவை. குழுவின் ஒப்புதல் பெற திட்ட ஆதரவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்துகிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.. மேலும், மத்திய விஸ்டா திட்டம் (Central Vista Project) என்ற பெயரில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான பகுதிகளை மறுசீரமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கும் அனுமதி அளித்துள்ளது.

புதியதாக கட்டப்பட உள்ள  நாடாளுமன்றக் கட்டிடத்தில்,  மக்களவையில் 876 இடங்களும், மாநிலங்களவையின் 400 இடங்களும், மத்திய மண்டபத்தின் 1224 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது.  அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தை டாட்டா நிறுவனம் மேற்கொள்கிறது.

மத்திய விஸ்டா திட்டம் என்பது என்ன?

டெல்லியில் ராஜ்பாத்தின் இருபுறமும் உள்ள பகுதி சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் இந்தியா கேட் அருகே ராஷ்டிரபதி பவனுக்கு அருகிலுள்ள பிரின்சஸ் பூங்காவின் பகுதி வருகிறது. இந்த பகுதியை புதுப்பிக்கும் திட்டமே மத்திய விஸ்டா திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.